வாஷிங்டன்: ரஷ்யாவின் தாக்குதலால் சிக்கி தவிக்கும் உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 2வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்விற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கி தரப்பில், ‛உக்ரைனுக்கு நிதியுதவி உள்ளிட்ட தேவைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்கும் என்றும்’ தெரிவித்துள்ளது.
உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், ‛உக்ரைன் நிகழ்வுகளின் விளைவாக அதிர்ச்சியூட்டும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் உலக வங்கி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலக வங்கி இருக்கும். உக்ரைனில் தற்போதைய நிலை பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும். இதனை சரிசெய்ய நாங்கள் பன்னாட்டு நாணய நிதியத்துடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.
Advertisement