மாஸ்கோ: சண்டையை நிறுத்தினால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் நகரை நெருங்கிவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதுடன் பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யாவிற்கு மேலும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய படைகளின் தாக்குதலில் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறுகையில், உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், புடின் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனக்கூறியுள்ளார்.
Advertisement