உக்ரைன் தலைநகரை சூழ்ந்தது ரஷ்ய ராணுவம் :பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார் என அதிபர் புடின் அறிவிப்பு| Dinamalar

மாஸ்கோ : உக்ரைனின் ராணுவ தளங்கள் நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் ”உக்ரைனுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா நேற்று இரண்டாவது நாளாக தாக்குதல்களை தொடர்ந்தது. தலைநகர் கீவ்வில் அதிகாலை முதலே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க துவங்கியதாக உக்ரைன் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.’பொது மக்கள் வெளியே வரவேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் முழுதும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கீவ் நகரை சுற்றி ரஷ்ய உளவாளிகளும் நாச வேலைகளில் ஈடுபடுவோரும் அதிக எண்ணிக்கையில் தென்படுவதாக உக்ரைன்ராணுவம் தெரிவித்துள்ளது.

‘நகரங்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல’ என ரஷ்யா தெரிவித்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்த ரஷ்ய படையினருடன் இவான்கிவ் என்ற இடத்தில் உக்ரைன் ராணுவத்தினர் நேற்று கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த இடம் கீவ் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனாலும் ரஷ்ய படைகள் கீவ் நகரை நெருங்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிழக்கு ஐரோப்பிய எல்லையில் ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் படை தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு வலுசேர்க்க கூடுதலான அமெரிக்க படையினர் ஜெர்மனியில் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உலக நாடுகளின் மவுனம் உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கியை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அவர் நேற்று கூறியதாவது:ரஷ்ய படையெடுப்பில் 137 அப்பாவி மக்களும் ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர். ராணுவ தளங்களை மட்டுமே அழிப்பதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் மக்களை கொன்று குவிக்கும் அத்துமீறலில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. உலக நாடுகள் எங்களுக்கு இப்போது உதவாமல் போனால் போர் நாளை உங்கள் நாட்டு கதவுகளையும் தட்டும். எங்களுக்கு உதவுவதாக கூறிய பெரிய நாடுகள் இப்போது எங்களை தனிமையில் விட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கீவ் புறநகர் பகுதியில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ள ரஷ்ய ராணுவம் இனி மற்ற நாடுகளில் இருந்து கீவுக்கு விமானங்கள் வர முடியாது என தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில் ‘ரஷ்ய போர் விமானங்கள் சிலவற்றை சுட்டு வீழ்த்தி விட்டோம். 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்’ என தெரிவித்துள்ளன. இதற்கிடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: உக்ரைன் மக்களை ராணுவம் மற்றும் சர்வாதிகார பிடியில் இருந்து மீட்கவே அதிபர் விளாடிமிர் புடின் இந்த படையெடுப்பை முன்னெடுத்தார். உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்தால் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார்’ என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் அதற்கு ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து பதில் வந்துள்ளது.இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறுகையில் ”பெலாரஸ் தலைநகரான மின்ஸ்கில் உக்ரைனுடன் பேச்சு நடத்த உயர்நிலைக் குழுவை அனுப்ப அதிபர் புடின் தயாராக உள்ளார்” என தெரிவித்தார்.

1000 பேர் பலி

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் பொதுமக்கள் 137 பேர், ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் பதிலடியில் இங்கு 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி போரில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் நிலைப்பாடு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று கூறியதாவது: ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டியது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை நாம் எடுக்கா விட்டால் அதன் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தைரியம் வந்துவிடும். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா ‘நேட்டோ’ நாடுகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தால் அமெரிக்கா அதில் தலையிடும். ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்த எந்த திட்டமும் இல்லை.ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளும் இதில் குற்றவாளிகள் தான். உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படவில்லை. நேட்டோ நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கவே அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பரவும் போலி ‘வீடியோ’க்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே அந்த போர் தொடர்பாக சித்தரிக்கப்பட்ட போலி ‘வீடியோ’க்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதை உண்மை என எண்ணி பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் தவறான தகவல்கள் மக்களுக்கு சென்றடைவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.

மக்களை மீட்க சீனா திட்டம்

போர் நடந்து வரும் உக்ரைனில் 6000க்கும் அதிகமான சீன மக்கள் உள்ளனர். அவர்களை மீட்டு வரும் பணிகளில் சீன அரசு இறங்கி உள்ளது. இதற்காக சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கீவில் உள்ள சீன துாதரகம் நேற்று வெளியிட்டது. இதற்கு முன்பதிவு செய்வதற்கான நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மாணவர்கள் தவிப்பு

உக்ரைனில் ரஷ்ய எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் சுமி என்ற நகரம் உள்ளது. இந்த நகரை ரஷ்ய படையினர் கைப்பற்றிவிட்டனர். இங்கு 400க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் சுமி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அடியில் உள்ள ஒரு சுரங்கத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தங்களை உடனடியாக மீட்க அவர்கள் இந்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

இணைய வழி தாக்குதல்

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதோடு மட்டுமல்லாமல் இணைய வழி தாக்குதல்களையும் அரங்கேற்றி உள்ளது. உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதன் அண்டை நாடுகளான லாட்வியா மற்றும் லித்துவேனியாவிலும் நுாறுக்கும் மேற்பட்ட கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இணைய வழி தாக்குதலை அரங்கேற்ற ரஷ்யா மூன்று மாதங்களாக திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் மக்கள் போராட்டம்

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருவதால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1745 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்ய அமைச்சரிடம் வலியுறுத்தல்

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை நேற்று தொலைபேசியில் அழைத்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். உக்ரைன் விவகாரத்தில் பேச்சு வாயிலாக தீர்வு காண அவருக்கு ஜெய்சங்கர் அறிவுறுத்தினார். பின் ருமேனியா ஹங்கேரி ஸ்லோவாக்கியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் பேசினார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க உதவி கேட்டு அவர் பேசினார்.

13 வீரர்கள் சுட்டுக்கொலை

உக்ரைன் மீது நிலம் வான், கடல் என மூன்று வழிகளில் இருந்தும் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் எல்லையோரம் அமைந்துள்ள கருங்கடலில் நேற்று முன்தினம் ரஷ்ய கடற்படையிடம் உக்ரைன் ராணுவ வீரர்கள் 13 பேர் சிக்கினர். அவர்களை சரணடைய ரஷ்ய படையினர் அறிவுறுத்தினர். அதற்கு மறுத்ததால் ரஷ்ய படையினர் 13 பேரையும் சுட்டுக்கொன்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.