உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு தங்கி இருந்து மருத்துவம் பயின்று வரும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்க உதவும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்ரைனில் போர் பதட்டம் அங்கு பயிலும் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. திருவாடானை, உத்தரகோச மங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சரவணன் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் MBBS பயின்று வருகின்றார். அவரை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக நாமக்கல் எம்.பி ஏகேபி சின்ராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியும் காய்கறி வியாபாரியுமான அர்ஜுனன் என்பவரது மகன் உக்ரைனில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வரும் நிலையில், மகனை மீட்டுத் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் காவலாளியாகப் பணியாற்றி வருபவரின் மகள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், மகளை மீட்டுத் தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவக்குமார் என்ற அந்த நபர், நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து, பார்வைக் குறைபாடு காரணமாக தனியார் சொகுசு விடுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
மகள் எந்த ஆண்டு உக்ரைன் சென்றார், அவர் என்ன படிக்கிறார், எத்தனை ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியாத சிவக்குமார், அவரை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூரைச் சேர்ந்த ரித்திகா என்ற மாணவியின் தாய் நாகலட்சுமி, தனது மகளை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தனது மகளுடன் உறவினர் மகளும் படித்து வருவதாகக் கூறும் நாகலட்சுமி, அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடிந்து 4 மாதங்களில் ஊர் திரும்ப வேண்டிய மகன், அங்கு ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டு தவித்து வருவதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.
கண்டமங்கலத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்ற அந்த மாணவர், தற்போது நண்பர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கி இருப்பதாகவும் 2 நாட்களுக்கான உணவு மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் அவரது பெற்றோர் கூறுகின்றனர். மகனை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.