புதுடெல்லி:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, இரண்டாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வான்வழி மூடப்பட்டதால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை உள்ளது.
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வந்தது. இதையடுத்து, தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தூதரகம் நோக்கி வரும் சாலைகள் மூடப்பட்டு, பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன. அப்பகுதி முழுவதும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக வந்த பெற்றோர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். உக்ரைனில் உள்ள தங்கள் உறவுகளை மீட்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.