லக்னோ: பாஜக மக்களவை எம்.பி.யான ஹேமா மாலினி உத்தரப் பிரதேசத் தேர்தலுக்காக பல்லியா பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார். தனது பிரச்சாரத்தில், ‘உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை நாடுகின்றனர்’ என்று தெரிவித்தார்.
ஹேமா மாலினி பிரச்சாரத்தில், “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் கொண்டுவந்துள்ளதை கண்டு உலகமே வியக்கிறது. மோடி ஜி தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார், உலகம் அவரை மதிக்கிறது. தற்போது நடக்கும் உக்ரைன் – ரஷ்யா போரை தடுக்கும் முயற்சியில் மோடி ஜி ஈடுபட வேண்டும் என்று எல்லோரும் அவரிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
உக்ரைன் போரில், மோடி உலகம் முழுவதும் நம்பிக்கையின் மையமாக பிரதமர் மோடி மாறியுள்ளார். மோடி மத்தியஸ்தம் செய்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவார் என்பதில் வெளிநாடுகள் உறுதியாக உள்ளனர். இந்தியா உலகின் குருவாக மாறுவதற்கான பயணத்தில் உள்ளது. பிரதமர் மோடியை ஒரு பெரிய உலகத் தலைவராகக் கருதுவது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம்” என்று பேசினார்.
முன்னதாக, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஐகர், உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டால் நிச்சயமாக போர் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார். பாரதப் போர் வியூகம், சாணக்கிய தந்திரம் ஆகியனவற்றைக் குறிப்பிட்டு உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தலையிடுமாறு அந்நாட்டுத் தூதர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
வேண்டுகோளுக்கு ஏற்ப, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நேர்மையான, உண்மையான பேச்சுவார்த்தைகளால் மட்டுமே ரஷ்யா நேட்டை குழு இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தவிர, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்களின் நலன் குறித்து பிரதமர் மோடி தனது அக்கறையை வெளிப்படுத்தினார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பிவைப்பதில் ரஷ்யா உதவ வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான ராணுவ தாக்குதல் குறித்த தகவல்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் வழக்கம் போல் தங்களின் பிராந்திய நலன் தொடர்பான விஷயங்களில் ராஜாங்க ரீதியாக தொடர்பில் இருக்கும் என்று பரஸ்பரம் ஒப்புதல் தெரிவித்துக் கொண்டனர் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இன்று செய்தி வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அதனை பேசியுள்ளார் ஹேமா மாலினி.