'உக்ரைன் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை..?' – ரஷிய போர் வீரரிடம் வாதிட்ட பெண்..!

லண்டன்,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் நேற்று உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்து வருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள்  ரஷிய படைகள் நுழைந்து உள்ளன.முன்னதாக பலாரஸ் நாட்டில் குவிக்கப்பட்டு இருந்த படைகள்  கீவ் நகருக்குள் நுழைந்து உள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் இன்று 2-வது நாளாக  தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் கீவில் உள்ள மக்கள் ரெயில்கள், கார்கள் மூலம் வெளியேறி வருகின்றனர். ஆனால் 18 வயது முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள் வெளியேற உக்ரைன் தடை விதித்து உள்ளது.
உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் உள்ள ஜேப்போரிஸியா பகுதியைக் குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதி அஸோவ் கடற்கரையை ஒட்டியுள்ளது. நிலம், கடல், வான்வழி என அனைத்து வகைகளிலும் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 65 மைல் தொலைவில் உள்ள பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. 1970-களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அணு உலையில் நான்கு உலைகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 1,000 மெகாவாட் மின்சக்தி உற்பத்திசெய்யும் திறன் கொண்டவை. 1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஏற்பட்ட விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 
மனிதத் தவறால் நடந்த இந்த பெரும் விபத்து தான் உலக நாடுகளில் பலரும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை இன்றளவும் முன்னெடுக்கக் காரணமாக இருக்கிறது. 2000-ல், செர்னோபிலின் கடைசி உலை மூடப்பட்டது. இந்த நிலையில் செர்னோபில் அணு உலை பாதுகாப்பு ஊழியர்களை ரஷியா சிறைப்பிடித்துள்ளது. ரஷிய படைகள் வீசிய குண்டு ஒன்று செர்னோபில் அணுக்கழிவில் விழுந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது போரில் செர்னோபில் அணுக் கழிவுகளால் எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உலகமே அச்சத்தில் உள்ளது. அதனாலேயே அங்கிருந்து ரஷியப் படைகள் விலக வேண்டும். அணு உலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
மேலும், செர்னோபிலில் இருந்து தலைநகர் கீவ் வெகு அருகில் தான் இருக்கிறது என்பதால் ரஷியா இன்றைக்குள் கீவ் நகரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. 29 லட்சம்  மக்கள் வசிக்கும் கீவ் நகரம் முழுவதும் இரவு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதை தடுக்க அந்நகரை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை உக்ரைன் தகர்த்து வருகிறது.
இந்த நிலையில் கீவ் நகருக்குள் ஊடுருவி உள்ள  ஆயுதம் தாங்கிய ரஷிய வீரரிடம், “உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரலாகி உள்ளது.
அந்த பெண் ரஷிய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷிய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.
அந்த வீடியோவில் அப்பெண், ஆயுதம் ஏந்திய ரஷிய வீரரைப் பார்த்து, “நீங்கள் யார்?” எனக் கேட்கிறார். அந்த வீரர் “எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்” எனக் கூறுகிறார்.
“பாசிசவாதிகளே… இங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, “நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்” எனக் கூறுகிறார். 
ஆனால் அந்தப் பெண் சற்றும் சமாதானமடையவில்லை. உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு  உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதையாவது வளரட்டும் என்று கூறி விட்டு செல்கிறார். சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர் ஆகும்.
அடையாளம் தெரியாத அந்த பெண்ணின் துணிச்சலுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.