உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்த மோதல்கள் இலங்கைக்கு குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள்
இலங்கை தற்போது அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என்பது இரகசியமான விடயமல்ல.
இந்த யுத்த மோதல்கள் காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி, அதேபோல் எரிசக்தி நெருக்கடிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹசித் கந்த உடஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் எரிசக்தி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்கள். இந்த இன்னும் சில நாட்களில் 120 டொலர்களாக அதிகரிக்கும். வரலாற்றில் அதிக்கூடிய விலை வரை கச்சாய் எண்ணெயின் விலை அதிகரிக்கலாம்.
இதனால், இலங்கை பெருந்தொகையான அந்நிய செலாவணியை செலவு செய்து எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய தேவையான அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத காரணத்தினால், எரிபொருளை கொள்வனவு செய்ய இந்தியாவிடம் ஏற்கனவே 400 மில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருந்தாலும் தற்போது உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்பார்த்த அளவு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிலவும் நிலைமையில், தேசிய சந்தையில் தற்போதைய விலைகளை விட எரிபொருளின் விலைகளை பெருமளவில் அதிகரிக்க நேரிடும் என உடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் முழு பொருளாதார கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடியில், மேலதிக டொலர்களை செலுத்த நேரிட்டால், அதனை இலங்கை மத்திய வங்கியால் சமாளிக்க முடியாமல் போலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா
அதேவேளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு 82 ஆயிரத்து 327 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளனர். 13 ஆயிரத்து 478 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது மொத்த தொகையில் 16.4 வீதமாகும்.
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இலங்கைக்கு வந்த ஏனைய நாடுகள், இந்தியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகியனவாகும்.
கடந்த ஜனவரி மாதம் உக்ரைன் நாட்டில் இருந்து 7 ஆயிரத்து 774 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மொத்த தொகையில் 10 வீதமாகும்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி உடஹேவா,
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்தே இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் வரப் போவதில்லை. ஏற்கனவே உக்ரைனின் வான் பரப்பு மூடப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நோயின் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும். இதுவும் மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு வழிவகுக்கும். டொலர் கிடைக்காது. ரஷ்யா மற்றும் உக்ரைன் மாத்திரமல்ல, ஐரோப்பாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் குறையலாம்.
உக்ரைன் – ரஷ்ய போர் நிலைமையானது உலக யுத்தமய நிலைமை வரை நீண்டு செல்லும் வாய்ப்புகள் இருப்பதால், சிறிது காலத்திற்கு சர்வசே அரசியல் ஸ்திரமற்று போகும். இதன் காரணமாக சுற்றுலாத்துறை பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கூறியுள்ளார்.
தேயிலை
இதனிடையே இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் பிரதான கொள்வனவாளர்களாக ரஷ்யாவும் உக்ரைனும் உள்ளன.
இதன் காரணமாக இலங்கைக்கு அந்நிய செலவாணி கிடைக்கும் மற்றுமொரு வழியும் குறுகிய அல்லது நீண்டகாலத்திற்கு இல்லாமல் போகலாம்.
யுத்தம் ஒன்று நடைபெறும் நேரத்தில் அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களே அன்றி, தமது நுகர்வு தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.இலங்கையின் உற்பத்தி ஏற்றுமதி சந்தைகளான ரஷ்யா, உக்ரைன் அதேபோல் ஐரோப்பாவிலும் இலங்கை இந்த சிக்கலை எதிர்நோக்க நேரிடும் எனவும் கலாநிதி உடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான இருத்தரப்பு வர்த்தகத்தை 700 மில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க இரு நாடுகளின் அதிகாரிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு விஜயம் செய்த போது 700 மில்லியன் டொலர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 388.98 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
ரஷ்யா, இலங்கையில் 15 வது ஏற்றுமதி சந்தை என்பது 24 வது மிகப் பெரிய இறக்குமதி சந்தையுமாகும்.
இலங்கை பிரதான ஏற்றுமதி பொருளாக ரஷ்யாவுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதுடன் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை சோளத்தை இறக்குமி செய்கிறது என பொருளாதார நிபுணரான சுபாஹாசினி அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்த பின்னர், உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெயின் விலை 105 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.
அத்துடன் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இரண்டு வருடங்களுக்கு பின்னர் பாரியளவில் அதிகரித்தது.
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்ததும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் பிளட்டினம் குறித்து கவனத்தை செலுத்தியதே இதற்கு காரணம்.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்திற்கு பின்னர் ஒரு அவுன்ஸ் ஸ்பெட் கோல்ட் ஆயிரத்து 973.96 டொரை நெருங்கியது. பின்னர் அது ஆயிரத்து 926.51 டொலராக பதிவாகியது.
இந்த நிலையில், பலப் பரீட்சை அரசியல் பக்கமாக நோக்கினால், உக்ரைன் – ரஷ்ய மோதல் பயங்கரமானது. உக்ரைன் சம்பந்தமான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஆதவளிக்கப்படும் என சீனா ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்பு நாடுகளாக சீனாவும் ரஷ்யாவும் ஒரு அணியில் இருக்க, மறு புறம் ஏனைய நாடுகள் இருப்பதாக கலாநிதி உடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இந்த அணி சார்ப்பு இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். பெரும்பாலும் இலங்கை சீனாவுடன் சம்பந்தப்பட்டுள்ளதால்,இலங்கையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளை விமர்சிக்க முடியாது. இலங்கைக்கு ரஷ்யாவுடன் அதிகமான தொடர்புகள் இருப்பது இதற்கு காரணம்.
இதனால், விரும்பியோ விரும்பாமலேயோ இலங்கை இந்த பல சமநிலையில் தலையிட நேரிடும். அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும். இலங்கை பெரிய விமர்சனங்களை முன்வைக்காது என கருதுகிறேன். இலங்கை தற்போது ரஷ்யாவுக்கு சார்பாகவே இருக்கின்றது என உடஹேவா குறிப்பிட்டுள்ளார்.