புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நேற்று 4-வது கட்டமாக வாக்குப் பதிவு முடிந்தது. மார்ச் 7-ம் தேதி வரை இன்னும் 3 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. மார்ச் 10-ல் வெளியாகும் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை இன்றி, தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. முதல் கட்ட தேர்தல் தொடங்கியதில் இருந்து இதுகுறித்த கருத்துக்கள் அதிகரித்து வருவதால் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய உ.பி. தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் முக்கிய எதிர்க்கட்சி சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி உருவானது. தனித்து போட்டியிடும் பகுஜன் (பிஎஸ்பி) மற்றும் காங்கிரஸ் முறையே 3, 4-வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. முதல் 2 கட்டத் தேர்தல்களில் ஜாட் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக இருந்தன. இதன் பலன் சமாஜ்வாதி கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சிக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்க வாய்ப்புகள் தெரிந்தன.
இதனால், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தேர்தல் முடிவுகளுக்கு பின் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்காக தம் கட்சியின் கதவுகள் திறந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்று ஜெயந்த் மறுப்பு தெரிவித்திருந்தார். அதேபோல், காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாஜக ஆட்சியை தடுக்க அமையும் கட்சிக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் கூறினார்.
இவர்களது கருத்துகளை வைத்து, உ.பி. தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை வரலாம் என்ற கருத்து வெளியாகி ஓய்ந்தது. தற்போது 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் தொங்கு சட்டப்பேரவை கருத்து அதிகரித்துள்ளது.
டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உ.பி.யில் தேர்தல் பிரச்சாரம் செய்கையில், ‘‘ஆம் ஆத்மிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என யாரும் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டப்பேரவை நிலை வந்தால், பாஜக ஆட்சி அமைவதை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிப்போம்’’ என்று உறுதியாக கூறினார்.
இதே விவகாரத்தை மீண்டும் பேசிய காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா, ‘‘உ.பி. தேர்தலில் பாஜக.வும், சமாஜ்வாதியும் ஒரே வகையான அரசியல் செய்து பலனடைகின்றன. இந்த பலன் பொதுமக்களுக்கு கிடைப்பது அவசியம். இதற்காக, தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் பாஜக தவிர அனைத்து கட்சிகளுக்கும் காங்கிரஸின் கதவுகள் திறந்து இருக்கும்’’ என்று திட்டவட்டமாக கூறினார்.
எனினும், தொங்கு சட்டப்பேரவை விவகாரத்தில் பாஜக.வின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு அமித் ஷா பதில் அளிக்கையில், ‘‘பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதால் யாருடைய ஆதரவும் தேவையில்லை’’ என்றார்.
கடந்த 2017 தேர்தலில் உ.பி.யின் 403 தொகுதிகளில் பாஜக 312 பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதில் அக்கட்சிக்கு 39.7 சதவிகித வாக்குகள் கிடைத்தன. மாயா வதியின் பிஎஸ்பி வெறும் 7 தொகுதிகளுடன் 22.2, அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி 47 தொகுதிகளுடன் 21.8 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தன. காங் கிரஸ் 9 தொகுதிகளுடன் 6.3 சதவிகித வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் கடைசி 3 கட்டதேர்தல்களில் பாஜக, சமாஜ் வாதியின் வாக்குகள் பிரியும் சூழல் நிலவுவதால் தொங்கு சட்டப்பேரவை கருத்து அதிகரித்துள்ளது.