நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நின்ற தனது மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று, பெண் ஒருவரை, காலணியால் தாக்கியதாக அதிமுக நிர்வாகி செல்வராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவகன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா தேவி. இவரை காலணியால் தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 2-வது வார்டில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வசந்தராணி என்பவரின் கணவர் செல்வராஜ்தான், சித்ரா தேவியை தாக்கியுள்ளார்.
தனது மனைவிக்கு வாக்களிக்க வில்லை என்று கூறி சித்ரா தேவியை, காலணியால் தாக்கியதோடு, இரண்டு பவுன் தங்க செயினை அறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக செல்வராஜ் மீது கறம்பக்குடி காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
சித்ரா தேவி புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் சேவுகன் தெருவில் என் கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில் என் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரரான பெரியான் என்பவரின் மகனான எம்.பி. செல்வராஜ் என்பவர், இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நின்றபோது ஓட்டுக்கேட்டிருந்தார். நாங்களும் ஓட்டுப்போட்டோம். ஆனால் நாங்கள் அவருக்கு ஓட்டுப்போடவில்லை என்று, எங்கள் வீட்டில் வந்து என் கணவர் இல்லாத நேரத்தில் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். நான் பயந்து எந்த வார்த்தையும் பேசாமல் நின்றேன்.
மறுநாள் காலை 24.02.2022 அன்று 9 மணியளவில் கொல்லைக்கு சென்ற என்னை வழிமறித்து எனக்கு ஓட்டு போடவில்லை. ஆனால் என் கொல்லை வழியாக ஏன் செல்கிறாய் என்று, என்னை செருப்பால் அடித்து கீழே தள்ளியும் என் சட்டையை கிழித்தும், கையால், முதுகில் அடித்தும் ,கேவலான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விட்டதோடு, என் கன்னத்தில் அறைந்ததில் என் இடது பக்கத்தில் உள்ள காதில் அணிந்திரநத தோடு, உடைந்து கீழே விழுந்துவிட்டது.
கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினும் அறுந்து எங்கு விழுந்தது என்றே தெரியவில்லை. கீழே விழுந்த நான் எழுவதற்குள் எனனை மீண்டும் மீண்டும் எழ விடாமல் உதைத்தார். ஆகவே எனக்கு தக்க தீர்வு வேண்டி. செல்வராஜ் என்பவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வராஜ் அந்தப் பகுதியின் அதிமுகவின் வட்டச் செயலாளராக உள்ளார். 2-வது வார்டில் போட்டியிட்ட இவரது மனைவி வசுந்தராணி தோல்வி அடைந்துள்ளார். அந்த ஆதங்கத்தில் சித்ராதேவியை செல்வராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இவர் மீது கறம்பக்குடி காவல் நிலையத்தில் 294B,506(1),341,355 ஆகிய நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM