தனியார் இணையதள தொலைக்காட்சி ஒன்று பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டது. அதற்கு சென்னை கண்ணகி நகரை சேர்ந்த அப்துல்கலாம் என்ற சிறுவன் அளித்த பதில் இணையத்தில் வைரலானது.
அந்த பேட்டியில் பேசிய சிறுவன், “உலகத்துல அனைவரும் சமம், நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க.
யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான்(பட்டப்பெயர்) கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான். ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி?” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாணவன் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், அவரை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்திருந்தார். தலைமைச்செயலகத்தில் தனது பெற்றோருடன் சென்ற சிறுவன் அப்துல் கலால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். மேலும் சிறுவனின் தாயை பொறுத்தவரை அவர் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவி. வர்தா புயலின்போது தங்களது வீட்டினை பறிகொடுத்தாக கூறினார். முதுகலை படிப்பு படித்திருந்தாலும் மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் தங்களை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் கூறினார். மேலும் சிறுவனின் பேட்டி வைரலானதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில்,சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்தினருடன் இன்று அமைச்சரை சந்தித்தார். அப்போது, சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணை நாளை வழங்கப்படும் என நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM