தங்கவயல்–தங்கவயல் நகரில் குப்பை, மண்ணை அகற்ற, ஐந்தாண்டுகளுக்கு முன் வாங்கிய நவீன வாகன இயந்திரம் மூலம் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. தங்கவயல் நகரை துாய்மைப்படுத்த, சுகாதாரத்தை பராமரிக்க தங்கவயல் நகராட்சியில் ஜே.சி.பி., இயந்திரங்கள், குப்பைகளை எடுத்துச் செல்லும் டிராக்டர்கள், டிப்பர் ஆட்டோக்கள்.குடிநீர் வழங்க டேங்கர்கள் என பலவும் உள்ளன. ஆனால், பல வாகனங்கள் பழுதடைந்துள்ளன.தங்கவயல் நகரின், முக்கிய சாலைகளை துாய்மை படுத்த ஐந்தாண்டுக்கு முன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனம், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டது. இதுவரை அந்த வாகனம் பயன்படுத்தாமல் கிடங்கில் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, ராபர்ட்சன்பேட்டை சுராஜ் மல் சதுக்கத்தில் பி.எம்.சாலையை துாய்மைப்படுத்த அந்த வாகனத்தை இயக்கினர். இது போன்று எம்.பி., நிதியில் கொடுத்த குடிநீர் டேங்கர்கள் உட்பட பல வாகனங்களை தேடி கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement