இஸ்லாமாபாத்: பல ஆண்டுகளாக அன்றாட விவகாரங்களுக்கே கடன் வாங்கிக்கொண்டு, உதவிக்காக கெஞ்சிக் கொண்டிருக்கும் ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தானாக தான் இருக்கும் என அந்நாட்டின் இஸ்லாம் கபார் பத்திரிகை விமர்சித்துள்ளது.
கோவிட் பாதிப்பிற்கு முன்பே பாகிஸ்தானில் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. கோவிட்டிற்கு பின் நிலைமை மேலும் மோசமடைந்தது. பாகிஸ்தானில் எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணங்கள் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.,) பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று நிலைமையை சமாளித்து வருகின்றனர். தற்போது ஐ.எம்.எப்., ஆனது 6வது தவனையாக பாகிஸ்தானுக்கு கடனளிக்க ஒப்புதலளித்துள்ளது. இதனை அந்நாட்டு நிதியமைச்சர் சவுகத் தாரின் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்ததை அந்நாட்டு பத்திரிகை கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாம் கபார் கூறியிருப்பதாவது: தேசத்தை அடிமைப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து புதிய தவணை கடனை பெறுவதற்கு நிதியமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது ஆச்சரியம் மட்டுமல்ல வருத்தமும் அளிக்கிறது. அன்றாட விவகாரங்களுக்கு கடன்கள் தேவைப்படும் ஒரே அணுசக்தி நாடு அநேகமாக பாகிஸ்தானாக தான் இருக்கும். உதவிக்காக கெஞ்சிக்கொண்டிருப்பது பல பத்தாண்டுகளாக தொடர்கிறது. தவறான நிதி மேலாண்மை மற்றும் நாட்டை நடத்த வெளிநாட்டு நிதிகளை சார்ந்திருப்பது போன்றவற்றால் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை புதிய வீழ்ச்சியில் உள்ளது. என கூறியுள்ளது.
Advertisement