கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக நேற்று ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். முதல் நாளான நேற்று ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது. இரண்டாம் நாளான இன்று தரைவழித் தாக்குதலை ரஷ்யா அதிகப்படுத்தியுள்ளது. கீவ் நகருக்குள் காலையில் இருந்தே குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டுவருகிறது.
இதற்கிடையில், வாக்குறுதியை மீறி ரஷ்ய படைகள் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். ’ரஷ்யாவுக்கு நான் தான் முதல் இலக்கு. என் குடும்பம் இரண்டாவது இலக்கு. எந்தச் சூழலிலும் நான் கீவில் தான் இருப்பேன். என் குடும்பம் உக்ரைனில்தான் இருக்கும்’ என்று அவர் கூறியிருந்தார்.
அதிகாலையில் கீவ் நகரில் தாக்குதல் தொடங்கியவுடனேயே உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்ய படைகள் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’பொதுமக்கள் ரஷ்ய ராணுவ நடமாட்டத்தைத் தெரிவிக்க வேண்டும். நாட்டில் இப்போது ஒவ்வொருவருமே வீரர்தான். எனவே ரஷ்ய படைகளைப் பார்த்தால் மொலடோவ் காக்டெய்ல் செய்து, அதை பற்றவைத்து வீசி எறியுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளது. மொலடோவ் காக்டெய்ல் என்பது ஒருவித பெட்ரோல் குண்டு எனக் கொள்ளலாம்.
இந்நிலையில், கீவ் நகரில் அரசு அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்திலிருந்து 3 மைல் தொலைவில் தற்போது ரஷ்யப் படைகள் முகாமிட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்க்யெ லாவ்ரோவ், ’உக்ரைன் வீரர்கள் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என்று கூறியுள்ளார். முன்னதாக அவர் இன்று காலையில், ’உக்ரைன் வெளிநாட்டு அடக்குமுறையில் இருக்கிறது. அதை மீட்கவே இந்த நடவடிக்கை’ என்று கூறியிருந்தார்.
முன்னதாக வீடியோ வெளியிட்டிருந்த உக்ரைன் அதிபர், ’ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பு தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய படைகளின் முதல் நாள் தாக்குதலில் உக்ரைன் தரப்பில் வீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் கொல்லப்பட்டதாக அந்நாடு அறிவித்தது. அதேவேளையில் தங்கள் படைகள் ரஷ்ய வீரர்கள் 800 பேரையும், 30 ராணுவ டாங்கர்களையும் வீழ்த்தியதாகக் கூறியது. தற்போது உக்ரைனில் பொதுமக்களில் மேலும் 25 பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உக்ரைனில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ், 20 மில்லியன் டாலரை மக்கள் நலன் பொருட்டு உக்ரைனுக்கு விடுவித்துள்ளார்.