வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தன்னீர் தொட்டி உள்ளிட்டவற்றில் கொசுப்புழுக்கள் அண்டாத வண்ணம் பரிமரிக்க வேண்டும் என பொதுமக்களை சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை ஒழிப்பது தொடர்பாக கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்பொழுது பொதுமக்களிடமிருந்து கொசு தொடர்பான புகார்கள் அதிகளவில் வரப்பெற்றுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்திட தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பூச்சியியல் வல்லுநர்கள் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்களில் மலேரியா பணியாளர்கள் மூலம் தினந்தோறும் காலையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, பொது இடங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் உள்ள நீர்வழித்தடங்களில் ஆம்பிபியன் மற்றும் ரொபோடிக் இயந்திரங்கள் கொண்டு ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் ஆகியவற்றை அகற்றி கொசுப்புழுக்கள் உருவாக வண்ணம் தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மழைநீர்வடிகால்களில் விதிகளை மீறி இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்றிட வேண்டும்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் AVIONICS துறை இணைந்து நீர்வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் ஆகியவற்றை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும்,
பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ். இ.ஆ.ப., அவர்கள், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் மற்றும் பூச்சியியல் வல்லுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.