சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 உடன் விருது! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 மற்றும் விருது வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான போட்டியில், அரசு அல்லது அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது” வழங்குவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை அங்கீகரிக்கும் வண்ணம் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதினை வழங்குவதற்கு அறிவியல் நகரத்திற்கு அரசால் ஒப்பளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அல்லது அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும், அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும், வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ. 25,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்விருதிற்கு ஐந்து பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள் ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளது.

இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்க தொடர்பான விதிகள் ஆகியவைகளை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2020-21-ஆம் ஆண்டிற்கான “சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது” வழங்க ஏதுவாக மேல் குறிப்பிட்டுள்ள ஐந்து வகைப் பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளிக் கல்வித் துறை அவர்களின் வழியாக அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.