முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு தண்டையார்பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஜெயக்குமார் தரப்பில் முன்னாள் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜரானார். காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரியதர்ஷினி ஆஜரானார். ஜெயக்குமார் பதிவிட்ட வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும். அதற்காக போலீஸ் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வாதத்தை முன்வைக்கப்பட்டது.
மேலும் சிசிடிவி ஆவணங்களையும் சேகரித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், திமுக பிரமுகரை தாக்கிய சமூகவலை தளத்தில் வீடியோவை பதிவேற்றம் செய்த நபர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக போலீஸ் காவல் வழங்க வேண்டும் என்று வாதத்தை காவல்துறை தரப்பில் தொடர்ந்து முன்வைக்கின்றனர்.
நந்தினி சத்பதி வழக்கு, பிரியதர்சினி வழக்கு,அம்புஜா குல்கர்னி வழக்கு, போன்ற வழக்குகளை காவல்துறை தரப்பில் மேற்கோள்காட்டி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டது.
ஜெயக்குமார் தரப்பில் வைக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் 420 மோசடி தொடர்பான வழக்குகள், ஆவண வழக்கு நிலமோசடி வழக்கு ஆகியவை தொடர்பானவை கிரிமினல் வழக்கு தொடர்பாக தீர்ப்புகளை மேற்கோள் காட்டவில்லை என்று காவல்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
சிறையில் சென்று காவல்துறை விசாரிக்கலாம் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதத்தை முன்வைத்தார். போலீஸ் காவல் தரக்கூடிய அளவுக்கு இந்த வழக்கு உகந்தது இல்லை என்றும் கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார் ஜெயக்குமார். எந்த தவறும் செய்யவில்லை என்றும் வழக்கறிஞர் ஏ.நடராஜன் கூறினார்.
அரசியல் பழி வாங்க போடப்பட்ட வழக்கு இது என்றும், பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி காவல் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்றும் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். இதற்கிடையில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் தொடர்பான வீடியோ லேப்டாப்பில் மாஜிஸ்திரேட்டிடடம் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் காண்பித்து தங்களது தரப்பு வாதத்தை பேசினர். செல்போனிற்காக போலீஸ் காவல் எடுக்க அனுமதி வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ண ஆனந்த் போலீஸ் காவலில் ஜெயக்குமாரை அனுப்ப இயலாது கூறி போலீஸ் காவல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக ஜெயக்குமாரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததையொட்டி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தை சுற்றி திமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயக்குமார் ஆஜரானதையொட்டி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் மற்றும் வழக்கறிஞர் மனோஜ்பாண்டின், கே.பி.கந்தன், பெஞசமின், விருகை ரவி, ஆதிராஜராம், பாலகங்கா உள்ளிட்டோர் வந்திருந்தனர். போலீசார் ஜெயக்குமார் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து சென்ற போது அங்கு இருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளை ஜெயக்குமார் கட்டி தழுவி மகிழ்ந்ததை வந்திருந்த அதிமுகவினர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எந்த வாக்கு மூலமும் கொடுக்க வேண்டிய அவசிய அவசியம் இல்லை என ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செல்போனில் யார் வேண்டுமானும் காட்சிகளை எடுத்து இருக்கலாம். அதை காவல்துறையே விசாரிக்கலாம். எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன் வைத்தோம்” என்று கூறினார்.
போலீஸ் காவல் மனு தள்ளுபடியான பிறகு முன்னாள் எம்பி ஜெயவர்தன் செய்தியாளர்களிடம், “திமுக அரசு பாசிச அரசு போன்று செயல்பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட போதே வருமான வரி தாக்கல் செய்திருக்க கூடிய நபர் முன்னாள் சபாநாயகர் என்ற அடிப்படையில் சிறையில் அவருக்கு ஏ பிரிவு வசதிகள் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தும் கூட பழிவாங்கும் நடவடிக்கையால் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் நியாயமாக தங்களுடைய வாதங்களை தெரிவித்து வருகிறோம். அதிமுக தலைமை அறிவித்தது போன்று 28-ம்தேதி வலுவான போராட்டம் நடத்தப்படும்” என்று ஜெயவர்தன் கூறினார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM