புதுடில்லி:டில்லியில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறுவதாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
தேசிய அளவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது போலவே, டில்லியிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரினர்.
இதுதொடர்பாக, டில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் துணை நிலை கவர்னர் அனில் பைஜல் தலைமையில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுகிறது. அதேபோல், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வோருக்கான அபராதம் 2,000 ரூபாயில் இருந்து, 500 ஆக குறைக்கப்படுகிறது.
ஏப்., 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கும். கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டாலும், கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். அரசுத்தரப்பில் அது தீவிரமாக கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement