டூ இன் ஒன் ஃபார்முலா… ஸ்டாலினிடம் சென்ற பஞ்சாயத்து! – வேலூர் மாநகர மேயர் ரேஸில் முந்துவது யார்?

வேலூர் மாநகராட்சியைத் தி.மு.க கைப்பற்றியுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. இதில், 45 வார்டுகளைத் தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. 7 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 6 வார்டுகளில் சுயேட்சைகளும், பா.ஜ.க மற்றும் பா.ம.க தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மேயர், துணை மேயர், நான்கு மண்டலக் குழுக்களின் தலைவர்கள் பதவிகளைக் குறிவைத்து, ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரும் காய்நகர்த்துகிறார்கள். இதற்காக நடத்தப்படும் பேரம் தலையைக் கிறுகிறுக்க வைக்கிறதாம்.

பெண்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மேயர் பதவிக்கான சமூகமோதலும் தி.மு.க-வில் ஓய்ந்தபாடில்லை. வன்னியரா? முதலியாரா? என்ற இருச்சமூக மோதலுக்கான பஞ்சாயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரடியாக தலையிட்டிருக்கிறாராம். ‘‘தன்னுடைய வன்னியர் சமூக கவுன்சிலரைத்தான் மேயராக்க வேண்டும்’’ என்கிறாராம் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன். இதற்கு மாற்றுச் சமூக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

புஷ்பலதா

24-ம் தேதி, துரைமுருகன் தரப்பும், வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தரப்பும் அறிவாலயத்தில் கூடியது. இருத்தரப்பினரும் முதலமைச்சரிடம் தங்களது பரிந்துரைகளை முன்வைத்தனர். மேயர் பதவிக்கு துரைமுருகன் தரப்பில், அவரது சமூகத்தைச் சேர்ந்த வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதா பெயர் முன்மொழியப்பட்டது. புஷ்பலதா 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றவர். அதேபோல, மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் மற்றும் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் ஆகியோர் தரப்பில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சுஜாதாவை முன்னிறுத்தினர். 31-வது வார்டில் வெற்றிபெற்ற சுஜாதா, வேலூர் மாநகர மகளிரணி அமைப்பாளராகவும் கட்சிப் பதவி வகிக்கிறார்.

துரைமுருகனின் ஆதரவாளரான புஷ்பலதா ‘மேயர்’ வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், துணை மேயர் பதவிக்கு முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆண் கவுன்சிலரைத்தான் முன்னிறுத்தக்கூடும் என்கிறார்கள். ஒருவேளை முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சுஜாதாவை ‘மேயர்’ வேட்பாளராக அறிவித்தால், துரைமுருகன் தரப்பை சமாதானம் செய்யவும் ஒரு வழியை கையாளப் போகிறதாம் தி.மு.க தலைமை. மேயர் ரேஸிலிருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த புஷ்பலதாவுக்குத் துணை மேயர் பதவி அல்லது ஒன்றாவது மண்டலக் குழுத் தலைவர் பதவியைக் கொடுத்துவிடலாம் என்பதுதான் தி.மு.க தலைமையின் திட்டமாம்.

டூ இன் ஒன் ஃபார்முலாவுக்கு துரைமுருகன் தரப்பு ஒத்துக்கொள்ளாது என்பதால்தான் இந்த விவகாரமே முதலமைச்சரிடம் கொண்டுச் செல்லப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்த நிர்வாகிகள்.

சுஜாதா

அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் அணைக்கட்டுத் தொகுதியில் 2-வது முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். நாயுடு சமூகத்தைச் சேர்ந்த அவர்… இந்த சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியைக் கேட்டிருந்தார். ஆனால், முதலியார் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவருக்கு இங்கு ‘சீட்’ மறுக்கப்பட்டு, மீண்டும் அணைக்கட்டுத் தொகுதியே ஒதுக்கப்பட்டது. இந்த முடிவை எடுத்ததும் முதலமைச்சர் ஸ்டாலின்தான். அதன்படி பார்க்கும்போது, மேயர் பதவியை முதலியார் சமூகத்தினருக்கே ஒதுக்க வேண்டும் என்ற முடிவையும் தலைமை எடுக்கக்கூடும். ஆனால், அந்தச் சமூகத்தில், சுஜாதாவைத் தவிர குறிப்பிடத்தக்க முன்னணி பெண் கவுன்சிலர்கள் யாருமே இல்லை. அந்தக் காரணத்தினாலும் துரைமுருகனின் ஆதரவாளர் புஷ்பலதா மேயர் ரேஸில் சற்று முன்னிலை வகிக்கிறார்’’ எனக் கூறுகிறார்.

அதோடு, எம்.எல்.ஏ-க்கள் தரப்பு முன்னிறுத்தும் சுஜாதா மீது அந்தக் கட்சிக்குள்ளேயே சில எதிர்மறை விமர்சனங்களும் ஓடிகொண்டிருக்கின்றன. அந்த விமர்சனம் கட்டுக்கதையாக இருக்கலாம் என்றாலும், அதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் சுஜாதா. எம்.ஏ., பி.எட் படித்தவர் என்பதும் சுஜாதாவின் கிராப்பை உயர்த்திக் காட்டுகிறது.

இன்னொரு பக்கம் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்தும் புஷ்பலதாவையே முன்மொழிகிறார். மாவட்டச் செயலாளர் நந்தகுமாருக்கும், எம்.பி கதிர் ஆனந்துக்கும் ஏழாம் பொருத்தம். மாவட்டச் செயலாளர் யாரை ஆதரித்தாலும், எந்த முடிவை எடுத்தாலும், அவற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கிறார் கதிர் ஆனந்த். சுஜாதாவை மேயர் ரேஸிலிருந்து பின்னுக்குத் தள்ளவும் எம்.பி தரப்பு நேரடியாகவே சில வேலைகளைச் செய்வதாகவும் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர் நந்தகுமார்

24-ம் தேதி அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன் தரப்புக்கு ‘கிரீன் சிக்னல்’ விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இதனால், ஆடுகளத்தில் அமைதியாக இருந்தபடியே மேயர் இருக்கையை நோக்கி நகர்கிறார் புஷ்பலதா வன்னியராஜா.

அதேசமயம், மாவட்டச் செயலாளர் தரப்பின் நியாயமான கோரிக்கையையும் முதலமைச்சர் பரிசீலனையில் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர், எம்.பி-யைத் தொடர்ந்து மேயரும் காட்பாடி பகுதியில் இருந்தே வருவதை வேலூர் புள்ளிகள் எதிர்க்கிறார்கள். இன்னொருப் பக்கம், துணை மேயர் பதவிக்கான மோதலும் பரபரக்க வைத்திருக்கிறது. புஷ்பலதா மேயராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டால், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பெற்ற சுஜாதா 4-வது மண்டலக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

துரைமுருகனின் வீடு இருக்கும் ஒன்றாவது மண்டலக் குழுவின் தலைவர் பதவிக்கு 7-வது வார்டு கவுன்சிலர் சுனில்குமார் குறிவைக்கிறார். இவரும் டூன் இன் ஒன் ஃபார்முலாவில்தான் காய்நகர்த்துகிறார். மண்டலக் குழு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் துணை மேயர் பதவிக்கும் துண்டு விரிக்கிறார். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் துணை மேயர் பதவி எட்டாக் கனியாகவே உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல, 22-வது வார்டு கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை, 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகர், 25-வது வார்டு கவுன்சிலர் கணேஷ் ஷங்கர் ஆகிய மூவரும் 2-வது மண்டலக் குழுத் தலைவர் பதவியைக் குறிவைக்கிறார்கள். இவர்களில், 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகரும் டூன் இன் ஒன் ஃபார்முலாவைப் பின்பற்றி துணை மேயர் பதவிக்கும் காய் நகர்த்துகிறார்.

எம்.பி கதிர் ஆனந்த்

44-வது வார்டு கவுன்சிலர் தவமணியும் மேயர் பதவியைக் கேட்கிறார். தவமணியின் கணவர் தாமோதிரனும் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார். ஆனால், இவர்கள் ‘யாதவர்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே மேயர் ரேஸிலிருந்து தவமணியின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 3-வது மண்டலக் குழுத் தலைவர் பதவிக் கொடுத்து, தாமோதிரன் தரப்பை சமரசம் செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. இன்னும் சிலரும் பதவிகளைக் கேட்டு பேரம் பேசத் தொடங்கியுள்ளனர்.

எது எப்படியிருந்தாலும் மேயர், துணை மேயர், 4 மண்டலக் குழுத் தலைவர்களின் பதவிகளை சாதி ரீதியாகப் பங்கிட்டுக் கொடுக்கும் முடிவை தி.மு.க எடுத்துள்ளது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர், முதலியார், யாதவர், இஸ்லாமியர் என இந்த நான்கு சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிவிட்டால் பிரச்னை ஏற்படாது என்று ஆளும் தரப்பு கருதுகிறது. மேயர் விவகாரம் ஓடிக்கொண்டிருக்க, சுயேச்சையாக வெற்றிபெற்ற 6 பேரும் தி.மு.க-வுக்குத் தாவும் முடிவில் இருப்பதாகவும் தகவலை உறுதிசெய்கிறார்கள் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் சிலர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.