டெல்லி: டெல்லியில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கி கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவிய நிலையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் விதித்திருந்தன. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக வேலையிழப்பு உள்ளிட்டவைகள் போன்ற காரணங்களால் மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஒன்றிய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்திக் கொண்டன. அதன்படி டெல்லியில் விதிக்கப்பட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும் விலக்கி கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.