கனடா என்னவோ உக்ரைனுடன் தொடர்பில்லாமல் வெகு தூரத்தில்தான் உள்ளது என்றாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கனடா மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதை மறுப்பதற்கில்லை… நேரடியாகவும், மறைமுகமாகவும்…
குறிப்பாக பாதிக்கப்பட இருப்பது எண்ணெய் விலை!
ஆற்றலைப் பொருத்தவரை ரஷ்யா ஒரு பெரும் சக்தி. கச்சா எண்ணெய் முதல் எரிவாயு வரை ரஷ்யாவின் ஆற்றல் தயாரிப்புகள் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது அது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், எண்ணெய் முதலான பொருட்களை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா கட்டுப்படுத்தலாம்.
ஏற்கனவே வியாழக்கிழமைக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியாயிற்று.
உணவுப்பொருட்கள் விலை
ஆற்றல் என்பது நேரடியாக அதிகம் பாதிக்கப்பட இருக்கும் ஒரு விடயமாக இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலையும் பாதிக்கப்படும். bread basket of Europe என அழைக்கப்படும் உக்ரைன், மக்காச்சோளம், கோதுமை முதலான உணவுப்பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாகும். ரஷ்யாவும் அப்படித்தான்!
ரஷ்யாவும் உக்ரைனும் இணைந்து மொத்த உலகின் கோதுமை தேவையில் 25 சதவிகிதத்தை உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். ரஷ்யா உக்ரைனுடன் போரில் இறங்கியுள்ளதால், உக்ரைன் துறைமுகத்திலிருந்து பொருட்கள் வெளியேற ரஷ்ய படைகள் இடைஞ்சலாக உள்ளதால், அந்த உணவுப்பொருட்கள் கிடைப்பது சந்தேகமே என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, கனடாவுக்கு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கோதுமைத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற ஒரு கருத்து உருவாகியுள்ளது.
அதற்கேற்றாற்போல் கோதுமை விலையும் உயரத் தொடங்கியாயிற்று!
பண வீக்கமும் விலைவாசி உயர்வும்
உணவுப்பொருட்கள் விலை உயர்வு சமீப காலங்களில் பண வீக்கம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக உள்ளது.
ஆக, விலைவாசி உயர்வு எதிர்பார்க்கப்படுவதுடன், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர வாய்ப்புள்ளது.
மொத்தத்தில், உக்ரைனுடன் திடீரென ரஷ்யா போர் துவங்கியுள்ளது கனடாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை மறுப்பதற்கில்லை.