துனிஸ் :
இஸ்ரேலிய நடிகை கேல் கடோட் நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியா திடீர் தடை போட்டுள்ளது. இதன் பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன.
நடிகை கேல் கடோட், இஸ்ரேல் ராணுவத்தின் பணியாற்றி உள்ளார், இவர், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை ஆதரிக்கிறார் என்று கூறப்படுவதால், துனிசியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதன் காரணமாக துனிசியா திரையரங்குகளில் இருந்து, அவர் நடித்துள்ள ‘டெத் ஆன் தி நைல்’ என்ற திரைப்படம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இந்தப்படம் இங்கிலாந்து எழுத்தாளர் அகதா கிறிஸ்டி எழுதிய கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஏற்கனவே குவைத், லெபனானில் தடை செய்யப்பட்டுள்ளது.
அரபு மற்றும் சர்வதேச திரைப்படங்களை கொண்டாடும் விதத்தில் சில முக்கிய விழாக்களை நடத்தும் துனிசியா, 2017-ம் ஆண்டு வெளியான ‘வொண்டர் உமன்’ திரைப்படத்தையும் தடை செய்தது. இந்தப் படத்திலும் கேல் கடோட் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். கேல் கடோட், இஸ்ரேல் அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.