தேசிய பங்கு சந்தையில் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு
தேசிய பங்கு சந்தையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணனின் சென்னையில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்றது.
பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக செபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சித்ரா ராமகிருஷ்ணன் பணிபுரிந்த காலத்தில் என்னென்ன விஷயங்கள் நடந்துள்ளன என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி சென்னையைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் சித்ரா ராமகிருஷ்ணன் நியமித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு முறைப்படி விளம்பரங்கள் செய்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியத்தை பதவியில் அமர்த்தி உள்ளார். இந்த நியமனத்திலும் முறைகேடு நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மும்பை சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பங்கு சந்தை முறைகேடு குறித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டினர்.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியத்தின் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து உடனடியாக ஆனந்த் சுப்பிரமணியத்தை மும்பைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு மார்ச் 6-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. பிரசாரத்தை நிறுத்திவிட்டு மாணவர்களை அழைத்து வரும் வழியைப் பாருங்கள்- நானா படோலே