நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி பாக முகவர்கள் கூட்டத்தில் தான் அளித்த, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உதயநிதி எம்.எல்.ஏ மாதம் 10 நாள் கோவைக்கு ஷிஃப் ஆவாரா என்று திமுகவினர் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, திமுகவின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த திமுகவின் தேர்தல் பூத் கமிட்டி பாக முகவர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், இந்த கூட்டத்தில் சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதால் மாநாடு போல பிரம்மாண்டமாக இருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி இவ்வளவு பேரும் வாக்களித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும் என்று கூறினார்.
அந்த கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: “நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும், கோவை மக்கள் ஏமாற்றி விட்டனர். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவையில் அதிமுக வென்றதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும், நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதாகவே நினைக்கிறேன். தேர்தலின் போது கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பாக முகவர்களாகிய நீங்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 800 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்தவரை அமர வைப்போம்.
மேயர் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவராக திமுக உறுப்பினரை அமர வைப்போம் என்று நீங்கள் அளித்த உறுதி மொழியை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பேன்.
கோவையில் 100 சதவீதம் வெற்றி என்ற இலக்கை அடையும் வரை ஓயக்கூடாது. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை கொடுத்தால் மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன்.” என்று கூறினார்.
தற்போது, நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 100 வார்டுகளில் திமுக மட்டும் 76 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதிமுக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கோவை அதிமுகவின் கோட்டை இல்லை. இனி கோவை திமுகவின் கோட்டை என்று திமுகவினர் பெருமை பேச வைத்தது.
கோவை திமுக வசமாகியுள்ளதால், உதயநிதி வாக்குறுதி அளித்தபடி மாதம் 10 நாள் கோவைக்கு சென்று மக்கள் பணியாற்ற கோவைக்கு ஷிஃப் ஆவாரா என்று திமுகவினர் மட்டுமல்ல கோவை மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“