தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.
இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்திலும் திமுக மிகப் பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக கவனிக்கத்தக்க வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் இறங்கியது.
பாஜக விலகிய நிலையில், இதரக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்தத் தேர்தலை எதிர்கொண்டது.
பாஜக, அமமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாக தேர்தலை சந்தித்தன.
பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை பெரிதாக சோபிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது கட்சி வாரியாக வாக்கு சதவீத விவரம் வெளியாகியுள்ளது.
நகராட்சியை (Municipality) பொறுத்த வரையில் திமுக 43.49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அதிமுக உள்ளது. அக்கட்சி 26.86 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
பாஜக -3.31%, காங்கிரஸ் – 3.04%, நாம் தமிழர் கட்சி – 0.74%, மக்கள் நீதி மய்யம் – 0.21%, பாட்டாளி மக்கள் கட்சி – 1.64% வாக்குகளை பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்: திக்.. திக்.. திருநெல்வேலி.. அல்வா நகரில் அசத்தல் ரிசார்ட் அரசியல்!
நகராட்சியைப் பொறுத்த வரையில் தேசிய அளவில் பெரிய கட்சியான காங்கிரஸை பாஜக பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அமமுக – 1.49%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.82%, தேமுதிக – 0.67%, மதிமுக – 0.69%, இந்திய கம்யூனிஸ்ட் – 0.38%, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.62%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.64%, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி – 0.02%, பகுஜன் சமாஜ் – 0.10%, ஆம் ஆத்மி கட்சி – 0.02%, இந்திய ஜனநாயகக் கட்சி – 0.08%, மனிதநேய மக்கள் கட்சி – 0.11%, புதிய தமிழகம் – 0.06% வாக்குகளைப் பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil