புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்ற தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பழனிவேல் தியாகராஜன் வைத்துள்ள முக்கிய கோரிக்கையில் கூறியதாவது: தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்க வேண்டும். அதேப்போன்று தமிழகத்தில் கடந்த அக்டோபர், நவம்பரில் மழை அதிகமாக இருந்ததால் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்காக ரூ.6230.45 கோடி தேவை என்று முன்னதாக மூன்று முறை தமிழக முதல்வரே கடிதம் எழுதியிருந்தார் அதனையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதில் ஒன்றிய அரசு நிவாரணச் செலவை உடனடியாக வெளியிடும் என்ற நம்பிக்கையில், தமிழக அரசு ஏற்கனவே மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.9,699.67 கோடி செலவிட்டுள்ளது. இதில் கொரோ னா தொற்று காரணத்தினால் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரப்படுகிறது. அதனால் மாநில அரசு கேட்ட ரூ.6203.45 கோடி மழை வெள்ள நிவாரணத்தையும், மேலும் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முக்கியமாக, 31.03.2022க்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கினால் தான் அதனை வரவு கணக்கில் சேர்க்க முடியும். இல்லையென்றால், நடப்பு ஆண்டுக்கான கணக்கில் அது சேர்ந்து விடும் இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.இதைத்தவிர விவசாயம், பொது, உள்ளாட்சி உட்பட தமிழகத்திற்கு வழங்காமல் இருக்கும் அனைத்து நிலுவை தொகை, மற்றும் நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டு நிதி ஆகியவற்றை விரைந்து விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக ஒன்றிய அரசின் நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன், வருவாய் துறைச் செயலர் தருண் பஜாஜ் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் அஜய் சேத் ஆகியோரையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். அப்போது தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் என்.முருகானந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் டெல்லி வந்த தமிழக அமைச்சரை தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையர் அதுல்யா மிஸ்ரா வரவேற்றார்.