ஹெனிசெஸ்க்: ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம், “உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?“ என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவ நடவடிக்கை வலுத்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியே “நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்“ என்று வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார் பெண் ஒருவர். அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷ்ய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.
அந்த வீடியோவில் அப்பெண், ஆயுதம் ஏந்திய ரஷ்ய வீரரைப் பார்த்து, “நீங்கள் யார்?” எனக் கேட்கிறார். அந்த வீரர் “எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்” எனக் கூறுகிறார்.
“பாசிசவாதிகளே… இங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, “நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்” எனக் கூறுகிறார். ஆனால் அந்தப் பெண் சற்றும் சமாதானமடையவில்லை. “உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்படும்போது அந்த விதையாவது வளரட்டும்” என்று கூறிச் செல்கிறார். சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர்.
ரஷ்ய வீரரை நோக்கி பெண் ஒருவர் வீராவேசமாகப் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்தச் சம்பவம் உக்ரைனின் துறைமுக நகரமான ஹெனிசெஸ்க்கில் நடைபெற்றது. ஹெனிசெஸ்க், கிரிமீயாவில் இருந்து 18 மைல் தொலைவில் உள்ளது.
உக்ரைனுக்குள் நுழைந்துவிட்ட ரஷ்யப் படைகள், கீவ் நகரைக் கைப்பற்ற முன்னேறிவருகிறது. பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உலக நாடுகள் ஏதேனும் செய்ய வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு வரை உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அதிபராக இருந்த விக்டர் மக்கள் புரட்சியால் தூக்கி எறியப்பட்டார். இப்போது மீண்டும் ரஷ்ய ஆதரவு அதிபரை உருவாக்கவே ரஷ்யா இத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யாவுக்கு எதிராக இருக்கும் இந்த ஒற்றைப் பெண்ணே மீண்டும் அப்படியொரு புரட்சி வெடிக்கலாம் என்பதற்கான சாட்சி என்று கூறப்படுகிறது.