பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: கடந்த 6 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான அரசின் உறுதித்தன்மையை பட்ஜெட்டில் பார்த்துள்ளீர்கள்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போதும், சுதந்திரத்திற்கு பிறகும், நமது பாதுகாப்பு தளவாட உற்பத்தி பலம் பெரியதாக இருந்தது. இரண்டாவது உலக போரின் போது, இந்தியாவின் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அதற்கு பிந்தைய ஆண்டுகளில், இந்தியாவின் பலத்தை பலவீனமாகியது. நமது உற்பத்தி திறனில் எந் விதமான குறைபாடும் இல்லை. கடந்த 6 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.

சொந்தமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தனித்துவமான அமைப்பு வைத்திருப்பதே பாதுகாப்பில் முக்கிய கொள்கை. ஒரே மாதிரியான பாதுகாப்பு தளவாடங்களை, 10 நாடுகள் வைத்திருந்தால், எந்த நாட்டின் பாதுகாப்பு துறையும் தனித்துவம் பெறாது. சொந்த நாட்டில் தளவாடங்கள் தயாரிக்கப்படும் போதே தனித்துவம் சாத்தியமாகும்.

பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி துறையில் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உகந்த துடிப்பான சூழலை உருவாக்குவதற்கான திட்டத்தை பட்ஜெட் வழங்குகிறது. நாம் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இறக்குமதி செய்யும்போது, இதற்கான நடைமுறை நீண்டதாக உள்ளது. அவை, நமது பாதுகாப்பு துறையினரிடம் வந்தடையும் போது காலாவதியாகி விடுகிறது. இதற்கு ஒரே தீர்வாக தன்னிறைவு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் உள்ளது,

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சக்தி தான் நமது மிகப்பெரிய பலம். இந்த பலத்தை பாதுகாப்பு துறையில் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் கடந்த 7 ஆண்டுகளில் 350 புதிய தொழில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000 முதல் 2014 வரை 2–00 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.