உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. போர் எதிரொலியால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மக்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, மாணவர்கள் உள்பட இந்தியர்கள் ஏராளமானோர் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரோமானிய மற்றும் ஹங்கேரிய எல்லைக் கடவுகள் வழியாக வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டில் படிக்கும் மும்பையைச் சேர்ந்த கால்நடை மருத்துவ மாணவர் ஒருவருடன் வீடியோ உரையாடலை பதிவிட்டிருந்தார்.
மேலும் டுவிட்டரில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:-
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மும்பையைச் சேர்ந்த மாணவி சைதாலியிடம் பேசினேன். உக்ரைன் போர் காரணமாக மாணவர்கள் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு இந்திய மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம்- இந்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கும் ரஷியா