'பீம்லா நாயக்' விமர்சனம் : கண்களுக்கு பவன் ; காதுகளுக்கு தமன்..! ஆனால்…

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் ப்ரித்விராஜும் பிஜு மேனனும் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். இதன் தெலுங்கு ரீமேக்தான் ‘பீம்லா நாயக்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. பிஜு மேனன் நடித்த கேரக்டரில் பவன் கல்யாண், ப்ரித்விராஜ் நடித்த கேரக்டரில் ராணா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எங்கோ எகிறிவிட்டது. பவன் கல்யாண் தம்முடுகளின் ஆரவாரத்த்தில் கோலாகலமாக வெளியானது ‘பீம்லா நாயக்’.

லாக்டெளனில் மற்ற மொழி படங்கள் பார்க்க தொடங்கிய நம் மக்கள் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை நிச்சயம் தவறவிட்டிருக்கமாட்டார்கள். முன்னாள் ராணுவ அதிகாரிக்கும் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடக்கும் ஈகோ க்ளாஷ்தான் படம். இப்படியான சாதாரண ஒன் லைனை எடுத்துக்கொண்டு, திரைக்கதையில் மிரட்டி, சூப்பர் ஹிட்டாக்கியிருப்பார், இயக்குநர் சச்சி. கிரிமினல் வழக்கறிஞராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில் இதன் திரைக்கதையும் ஒவ்வொரு காட்சிகளும் நச் என்று அமைத்திருப்பார். எல்லோரும் ரசித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக் எப்படி இருக்கிறது ?

‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் கல்யாண்

ஆந்திராவில் வனப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பீம்லா நாயக் ( பவன் கல்யாண்). முன்னாள் ராணுவ அதிகாரியான டேனியல் சேகர் (ராணா). ‘வீரம்’ படத்தின் பாடலில் ‘யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான்’ என்று ஒரு வரி வரும். அது பவன் கல்யாணுக்கு அப்படியே பொருந்தும். கடந்த 25 வருடங்களில் 27 படங்களே நடித்திருந்தாலும் பக்கா மாஸ் ஃபேன் ஃபாலோயிங் கொண்டவர். எல்லா டோலிவுட் நடிகருடைய ரசிகர்களும் நிச்சயம் பவன் ரசிகர்களாகவும் இருப்பார்கள். மாஸ் என்றால் பவன், பவன் என்றால் மாஸ். அதற்கு தகுந்தாற்போல, இப்படத்தின் டைட்டிலில் ‘பீம்லா நாயக்’ என்று பவன் கேரக்டர் மட்டுமே இருக்கும். அதில் இரண்டு பேருக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். இதில் அப்படியிருக்காது போலயே என்ற எண்ணம் இருந்தது. ஆனால், படத்தில் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பவன் கல்யாண் படங்களில் அவருடைய என்ட்ரிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அதற்கு தகுந்தாற்போல், பவனை பல ஆங்கிளில் ரசித்து காட்டியிருக்கிறார்கள்.

சில்லவுட்டில் டார்ச் அடித்துக்கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் பவன் கல்யாண். அவர் கையிலிருக்கும் டார்ச் ஆஃபான பிறகு, அவர் முகத்தில் டப் என்று வெளிச்சம். திரையரங்கு அதிர்கிறது. ‘ஜெய் ஜெய் பாபு கல்யாண் பாபு’ என்று தனது தம்முடுகளின் கோஷங்களுடன் பவனின் அசத்தல் என்ட்ரி. மாஸான சப் இன்ஸ்பெக்டராக அநாயசமாக ஸ்கோர் செய்கிறார், பவன் கல்யாண். அவர் சஸ்பென்டான பிறகு, வரும் காட்சிகள் அனைத்தும் தெறிக்க விடுகின்றன. ‘ரா ரா கொடுக்கா…’ என பவன் லுங்கியை மடித்துக்கட்டி சண்டையிடும் காட்சிகள் வாவ்! பவன் படங்களுக்கே உண்டான மாஸ் காட்சிகள், பன்ச் டயலாக்குகள் என பவன் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக இந்தப் படம் நிச்சயம் இருக்கும். (குறிப்பு : பவன் கல்யாணையும் பிஜு மேனனையும் ஒப்பிட்டு பேசக்கூடாது. அது வேற மாறி. இது இது பக்கா மாஸ் தெலுங்கு படம்)

‘பீம்லா நாயக்’ படத்தில் ராணா

ராணா தன் பங்கை மிகச்சரியாக செய்திருக்கிறார். ஆனால், ஷோ ஸ்டீலர் என்னவோ பவன் கல்யாண்தான். ராணாவுக்கு இன்னும் கொஞ்சம் மாஸ் கொடுத்திருக்கலாம். பவன் கல்யாண், ராணா என இரு நாயகர்கள் திரையில் இருந்தாலும் மூன்றாவது ஹீரோவாக தமன் இசை இருக்கிறது. கண்களுக்கு பவன், காதுகளுக்கு தமன் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து ! ‘பீம்……லா நாயக்’ என்ற டைட்டில் ட்ராக் வருகிறது. அதில் செம கேஷுவலாக பவன் ஆடும் நடனம் ஆஹா! சும்மாவே சிக்ஸர்களை பறக்கவிடும் நல்ல ஹிட்டருக்கு ஃபுல் டாஸ் பால் கிடைத்தால் சொல்லவா வேணும் ? நிச்சயம் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் தான். அப்படியான தரமான சம்பவம் ‘லாலா…பீம்லா’ பாடல். இந்தப் பாடலை கேட்கும்போது, கால்கள் தானாக ஆடும். படம் முடிந்து வெளியே வந்த பிறகும், நம்மையே அறியாமல் ‘லாலா பீம்லா…’ என்று வாய் முணுமுணுக்கிறது. பின்னணி இசையின் மூலம் படத்தின் ஓட்டத்தை விறுவிறுக்க செய்திருக்கிறார். ஜெய் தமன்!

‘அலா வைகுந்தபுரமுலோ’ இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத, சாகர் சந்திரா இயக்கியிருக்கிறார். முதல் பாதி முழுக்க ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் வரும் காட்சிகள் அப்படியே இருக்கிறது. இரண்டாம் பாதி முழுக்கவே மாற்றியிருக்கிறார்கள். தெலுங்கு சினிமா ரெண்டு ரகம். ஒன்று மாஸ் ; மற்றொன்று சென்டிமென்ட். க்ளைமேக்ஸில் சென்டிமென்ட்தான் ஜெயிக்கிறது. அது கொஞ்சம் டிராமாக இருக்கிறது. இன்னும் சொன்னால் ஸ்பாய்லராகிவிடும். பவன் கல்யாண் மனைவியாக நித்யா மேனன், ராணா மனைவியாக சம்யுக்தா மேனன், ராணா அப்பாவாக சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டர் நவீன் நூலி படத்தை கனக்கச்சிதமாக கட் செய்து கொடுத்திருக்கிறார்.

‘அய்யப்பனும் கோஷியும்’

‘அய்யப்பனும் கோஷியும்’ 2 மணி நேரம் 55 நிமிடங்கள் இருக்கும். ஆனால், இதை 2 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஒரிஜினல் வெர்சனில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் இருவரையும் சார்ந்தே திரைக்கதை நகரும். இருவருமே ஆடியன்சுக்கு ஹீரோவாகத் தெரிவர். ஆனால், இக்கட ஒக்க ஹீரோ பவன் கல்யாண் மட்டுமே. மலையாளத்தில் யதார்த்தமான ஆக்‌ஷன் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்கும். இதில் மசாலா ஆக்‌ஷன்தான். எரிந்துகொண்டிருக்கும் கடப்பாரையை எடுத்து சொருகுதல், நெல் மூட்டையை தூக்கிப்போட்டு இரண்டாக கிழித்தல், புல்லட்டை புரட்டிப்போடுதல் போன்ற சில விஷயங்கள் இருக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் எல்லோரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். படத்தில் மற்றவர்களுக்கு எல்லாம் ஐபோன்கள் கொடுத்துவிட்டு, ஹீரோ பவன் கல்யாணுக்கு மட்டும் பட்டன் போன் கொடுத்ததை போல ‘அய்யப்பனும் கோஷியும்’ ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் சில ஒவ்வாமைகள் தெரியும். ஆனால், டோலிவுட் ரசிகர்களுக்கு ‘பீம்லா நாயக்’ நிச்சயம் ஃபேவரைட்டாக இருப்பார்.

‘லாலா… பீம்லா’ !

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.