புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால், பொதுமக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும், ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் போலிகா தெரிவித்துள்ளார்.
“சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய உலகத் தலைவர்களில் ஒருவர் மோடி. ரஷ்யாவுடன் உங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. மோடி புதினிடம் பேசினால், அவர் நல்ல பதிலை வழங்குவார் என்று நம்புகிறோம். வரலாற்றில் பலமுறை, இந்தியா அமைதிக்கான தனது பங்களிப்பை செய்துள்ளது. எனவே, இந்தப் போரை நிறுத்த நீங்கள் வலுவான குரல் கொடுக்க வேண்டும்” என்று உக்ரைன் தூதர் கேட்டுக்கொண்டார்.