மாஸ்கோ:
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு புதின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது.
மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், செல்யாபின்ஸ்க் உள்பட 53 நகரங்களில் புதின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ரஷிய சமூக ஊடகங்களில் புதின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.
இந்த போராட்டம் குறித்த காணொலி காட்சி பரவியதால் ஆயுதம் ஏந்திய போலீசார் போராட்டம் நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். மேலும் 1,700 பேரை கைது செய்த அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மக்கள் போராட்டம் அவர்கள் போரை விரும்பவில்லை என்பது குறித்த அறிகுறியாகும் என்று, கார்னகி ஆராய்ச்சி நிறுவன மூத்த நிபுணர் பால் ஸ்ட்ரோன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷிய சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தைரியமானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலால் பல ரஷியர்கள் அச்சத்தில் உள்ளதாகவும், போர் குறித்து விரிவான பொதுக் கருத்துக் கணிப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டமில்லை – ஜோ பைடன் அறிவிப்பு