புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதி மக்களுக்கு தனியார் மூலம் வீடு தேடிச் சென்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன், பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி நகரப் பகுதி மக்களுக்கு நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 140 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப் பட்டுள்ளது.பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் 100க்கும் மேற்பட்ட கிணறுகளில் தண்ணீர் உவர் தன்மையாக மாறிவிட்டது. அதனால், அதனை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி நகரின் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.அதன்பேரில், ஆற்றுப்படுகையில் ஆழ்குழாய் கிணறு அமைக்க, பிரான்ஸ் அரசு ரூ.500 கோடி நிதி வழங்க முன்வந்துள்ளது. அதை தொடர்ந்து மணமேடு கிராமத்தில், பெண்ணை ஆற்றங்கரையில் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தால் நிலத்தடி நீர் வளம் குறைந்து, விவசாயம் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இத்திட்டம் துவக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மதியம், சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.
பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். நேரு எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் அஸ்வனி குமார், பொதுப் பணித் துறை செயலர் நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, ஸ்மார்ட்சிட்டி துணை முதன்மை செயலர் மாணிக்கதீபன், புதுச்சேரி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, ஆற்றுப்படுகையில் ஆழ்குழாய் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மக்களை சமாதானப்படுத்தி, ஆழ்குழாய் அமைத்தாலும் அங்கிருந்து 30 கி.மீ., துாரத்திற்கு குழாய் அமைத்து, நகருக்கு கொண்டு வர வேண்டும். இப்பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும்.
அதனால், லட்சத்தீவில் நடைமுறையில் உள்ளது போன்று, தனியார் மூலம், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணற்று நீரை சுத்திகரித்து, வீடுகளுக்கு நேரடியாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட மாற்று திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement