செர்னோபில் அணுமின் நிலையத்தில் 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அணு உலை விபத்து நிகழ்ந்தது. இந்தக் கதிரியக்க தளம் உக்ரைனின் தலைநகரான கியேவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையப் பகுதியில் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துள்ளதாக உக்ரைனின் அணுசக்தி நிறுவனம் மற்றும் உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஆனால், அங்கிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை அணுமின் நிலைய வல்லுநர்கள் அறிவிக்கவில்லை. மாறாக, அப்பகுதியில் `தற்போது கனரக ராணுவ உபகரணங்களின் இயக்கத்தின் காரணமாக, காற்றில் கதிரியக்க அளவு அதிகரித்து இருக்கலாம்’ என தெரிவித்தனர்.
“கதிர்வீச்சு அதிகரிக்கத் தொடங்கியுள்ள தற்போதைய சூழலைப் பொறுத்தவரையில் உக்ரைன் தலைநகரான கீயேவுக்கு பாதிப்பு இல்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து வருகிறோம்” என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைனின் அண்டை நாடான போலந்து, தனது எல்லையில் கதிர்வீச்சு அளவுகளில் எந்த அதிகரிப்பும் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளது.