செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
பிப்ரவரி 24, 2022. வழக்கமான நாளாக அமையவில்லை. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் அறிவித்த விநாடிகளில் கிழக்கு உக்ரைன் அதிரத் தொடங்கியது. 2 ஆம் நாளான இன்று தலைநகர் கீவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதில் உக்ரைன் நாட்டவரும் அடங்குவர். உக்ரைனில் உள்ளோரின் உறவினர்கள் ரஷ்யாவிலும் ரஷ்ய மக்கள் சிலர் உக்ரைனிலும் வசித்து வருகின்றனர்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் பிரதான நகரான செவ்ஸ்கி ப்ராஸ்பெக்டில் ஏராளமான இளைஞர்கள் வியாழன் இரவு திரண்டனர்.
“No to war!” போர் வேண்டாம் இது தான் அவர்கள் அனைவரும் கூட்டாக ஒலித்த மந்திரம். போர் தொடங்குவதற்கு முன்னரே உக்ரைன் மீதான தாக்குதலைத் தடுக்கும் சக்தி ரஷ்ய மக்களுக்கு மட்டுமே உள்ளது என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யா போரைக் கைவிட வேண்டும் என்ற குரல் உள்நாட்டிலேயே ஓங்கி ஒலிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர்.
இளைஞர் ஒருவர், “என்னிடம் வார்த்தைகள் இல்லை. போர் நடத்தப்படுவதை வெறுக்கிறேன்“ என்றார்.
இளம் பெண் ஒருவர் “இந்தப் போரை நிறுத்த உத்தரவிடும் வலிமை எங்களுக்கு இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்“ என்று கூறினார்.
ரஷ்ய நாட்டின் சுயாதீன, தனியார் ஊடகவியலாளர்கள் பலரும் போருக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையை உருவாக்கி அதில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ரஷ்யர்கள் உக்ரைன் கொடி நிறத்தில் பலூன்களை ஏந்தி வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்களில் ஒருவர், “இன்று காலை போர் அறிவிக்கப்பட்டவுடன் நான் மிகவும் வெட்கப்பட்டேன்“ என்றார்.
“உக்ரைன் நம் எதிரி அல்ல; போர் வேண்டாம்“ எனக் கைதட்டி கோஷமிட்டனர் போராட்டக்காரர்கள். அவர்களை அச்சுறுத்த ரஷ்யாவின் அதிரடிப் படையான OMON ரய்ட ஸ்குவாட் இறக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் களையவில்லை.
“வெட்கக்கேடு! ஒருவரால் எல்லோருக்கும்“ என்ற கோஷமும் ஒலித்தது. அரசுக்கு எதிரான கோஷங்கள் வலுக்க போலீஸார் கைது நடவடிகைகளில் இறங்கினர்.
அதற்கும் அஞ்சாத பெண் ஒருவர், “நீங்கள் ஏன் எங்களுடன் நிறகக் கூடாது. நாங்கள் வெகுண்டெழுந்தால் எங்களுடன் சண்டையிட்டு நீங்கள் தான் உயிரிழப்பீர்கள்“ என்றார்.
“புதின் ஒரு கொலைகாரர்! அவர் ரஷ்யாவின் அவமானம்” என்று சிலர் முழங்கினர். புதினை ஹிட்லராக சித்தரித்த பதாகைகள் போராட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
ரஷ்ய மக்கள் மட்டுமல்ல அமெரிக்கா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து எனப் பல நாடுகளிலும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.