மயிலாடுதுறை முழுவதும் பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை காரணத்தினால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் கொடுக்க முடியாமல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் திணறி வருகிறார்கள். மாதக்கடைசி என்பதாலும், இந்த மாதம் 28 தேதிகள் மட்டுமே என்பதாலும், பொதுமக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
ரேஷன் கடை ஊழியர்களும், பொருள்கள் இருந்தும் அவற்றை பதிவு செய்து விநியோகிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் கண்காணிப்பு குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான அப்பர் சுந்தரத்திடம் பேசினோம். “உடனடியாக சர்வர் சரிசெய்யப்பட வேண்டும். இதுபோன்று பிரச்னைகள் ஏற்படும் போது உணவுப் பொருள் விநியோகம் தடையில்லாமல் நடைபெறுவதற்கு ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள் வழங்கப்படும் விவரங்களை தற்காலிகமாக கையேடுகளில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்
பலமுறை பொருள் வாங்க பயனாளிகள் வருவதால் அவர்களுடைய வேலை தடைபடுவதுடன், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்பதை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்வர் இயங்கவில்லை என்றோ, வேறு காரணங்களைக் கூறியோ அவர்களை இழுத்தடித்து அலைக்கழிப்பது என்பது ஏற்புடையதல்ல. நடைமுறை சிக்கல்கள், இதர சங்கடங்களும் இல்லாமல் நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்படவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதை இந்தத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் செயலாற்ற வேண்டும்” என்றார்.