கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியில் 12-ம்வகுப்பு படிக்கும் சீக்கிய மாணவிஒருவரை அவரது தலைப்பாகையை அகற்றிவிட்டு கல்லூரிக்கு வருமாறு வலி யுறுத்தப்பட்டது. இதனால் தற்காலிகமாக அந்த மாணவி கல்லூரி செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
கல்லூரி நிர்வாகம் கூறும் போது, “உயர் நீதிமன்றம் மற்றும்கர்நாடக அரசின் சுற்றறிக்கையின்படி மத ரீதியான உடைகளை மாணவர்கள் அணிந்துவர அனுமதிஇல்லை” என்று தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை குர்சரண் சிங், கல்லூரி நிர்வாகத்திடம் அளித்துள்ள கடிதத்தில், “எனது மகள் சீக்கிய முறைப்படி அமிர்ததாரி (ஞானஸ்நானம்) ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அவர் சீக்கிய ஆண்களைப் போல தலைப்பாகை அணிவது மத மரபாகும். கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றுக்கு மட்டுமே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது” என்றார். கல்லூரி நிர்வாகத்துக்கு சீக்கிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் குர்சரண் சிங் தெரிவித்தார்.