நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரராக உயர்ந்திருக்கிறார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ். கடந்த 18 ஆண்டுகளில் நடால், ஜோகோவிச், ஃபெடரர், முர்ரே ஆகிய நால்வரைத் தவிர இவ்விடத்திற்கு முன்னேறியிருக்கும் முதல் வீரர் இவரே. மேலும் ‘Open era’வின் ஆடவர் ஒற்றையர் பட்டியலில் முதல் இடத்திற்கு உயர்ந்திருக்கும் 27-வது வீரர் மெத்வதேவ். இதுதவிர எவ்கேனி கஃபில்நிகோவ் மற்றும் மரட் சஃபின் ஆகியோருக்கு பிறகு இச்சாதனையை செய்யும் மூன்றாவது ரஷ்ய வீரர் இவர் தான்.
நேற்று நடந்த மெக்ஸிகன் ஓப்பன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் யோஷிடோ நிஷியோகாவை 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார் மெத்வதேவ். அதே நேரத்தில் துபாய் ஓப்பன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 123-வது இடத்தில் இருக்கும் ஜிரி வெசலியிடம் தோல்வியைத் தழுவியிருந்தார் ஜோகோவிச்.
இதனால் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் அதாவது கடந்த 86 வாரங்களாய் தான் இருந்த வந்த முதலிடத்தை மெத்வதேவிடம் இழக்க வேண்டி இருந்தது. தடுப்பூசி விவகாரம் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜோகோவிச் விளையாடும் முதல் டென்னஸ் தொடர் இது தான். ஆனால் ஒட்டுமொத்த ATP வார பட்டியலில் 361 வாரங்களுடன் ஜோகோவிச்சே முதலிடத்தில் நீடிக்கிறார்.
இச்சாதனைக்கு மிகத் தகுதியானவர் மெத்வதேவ் என தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார் ஜோகோவிச். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறியிருந்த மெத்வதேவ் அதற்கு முன்னர் நடந்த அமெரிக்கன் ஓப்பன் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி தன் முதல் கிராண்ட் ஸ்லாமை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.