சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தேசியகட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பது, பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சி என்று கூறப் படுகிறது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தேசிய மற்றும் மாநிலக்கட்சிகள் கூட்டு சேர்ந்து தேர்தலைசந்திக்க முடிவெடுத்து, அதற்கானமுன்னெடுப்புகளை தொடங்கியுள் ளன.
இதுதவிர, இந்த ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியும் தொடங்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் நடைபெற்று வருகிறது.
சந்திரசேகர ராவ் சந்திப்பு
இதற்கிடையே, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்துபேசியுள்ளார். அடுத்த கட்டமாக பல்வேறு மாநிலங்களின் கட்சித்தலைவர்களையும், தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு’ என்ற அமைப்பை தொடங்கியதுடன், சமூக நீதியில் பிடிப்புள்ள கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை இந்த அமைப்புக்கு வழங்க வேண்டும் என்றும் பாஜக தவிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள், அதிமுகஉள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அறிவித்தார். இந்த கூட்டமைப்பில் இணையவில்லை என அதிமுக அறிவித்து விட்டது. மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள்இதற்கு விருப்பம் தெரிவித்துள் ளன.
28-ம் தேதி நூல் வெளியீட்டு விழா
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான, ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகம்வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்.28-ம் தேதி மாலை 3.30 மணிக்கு இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிடுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தேசிய தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
ஒருங்கிணைப்புக்கான முதல் படி
காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க சில கட்சிகள் முயற்சி செய்து வரும்நிலையில், அதை விரும்பாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஒரே கருத்துடைய கட்சிகளை இணைக்கும்முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அதன் முதல்படிதான் இந்த நூல்வெளியீட்டு விழா என்று கூறப் படுகிறது.