தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக திமுக -வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் முண்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரின் ஜாமின் மனு மீதான விசாரனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மேலும் ஒரு வழக்கை ஜெயக்குமார் மீது குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.
5 கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக மகேஷ் என்பவர் குற்றபிரிவு பொலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் மீது, குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நிலையில் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.