மும்பை,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை முன்னிட்டு கச்சா எண்ணெய் விலை அதிரடியாக ஒரே நாளில் நேற்று பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் அளவில் அதிகரித்தது. இதனால் இந்தியாவில் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்தன. இதன்படி, சென்செக்ஸ் 2,702 மற்றும் நிப்டி 815 புள்ளிகள் சரிந்திருந்தன. தங்கம் விலையும் அதிகரித்தது.
இந்த நிலையில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் பொருளாதார தடைகள் விதித்ததன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகள் இன்று கணிசமான உயர்வுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலையில் சென்செக்ஸ் குறியீடு 1,264 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. இதனால் பங்குச்சந்தை 55,794 புள்ளிகளில் வர்த்தகமானது. கோல் இந்தியா, நிஃப்டி வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. நெஸ்ட்லே இந்தியா, இந்துஸ்தான் லீவர், வெள்ளி, கச்சா எண்ணெய் காப்பர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.
இந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,328.61 புள்ளிகள் அதிகரித்து 55,858.52 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்து கொண்டன. மேலும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 410.45 புள்ளிகள் அதிகரித்து 16,658.40 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்து கொண்டது.
இதனால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் ஏற்றம் கண்டு 75.27 காசுகளில் நிறைவடைந்தது.