ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்று பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் இரண்டாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இன்று பொதுமக்கள் வாழும் 33 பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று உக்ரைனின் செயல்பாட்டினை முடக்கும் விதமாக இராணுவ தளவாடங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், இராணுவ முகாம்கள், விமான தளங்கள் என பல முக்கிய இடங்களை தாக்கியது. ராணுவ வாகனங்களையும் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது.
எல்லை மீறிய பிரச்சனை
ஆனால் இன்று பிரச்சனை எல்லை மீறிவிட்டது எனலாம். உக்ரைனின் தலைநகரான கிவியில் பெரும் பதற்றமான நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளை துண்டிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இன்னும் பல திட்டங்களை ரஷ்யா கைவசம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக உக்ரைனை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அனைத்து செயல்களையும் செய்து வருவதாக தெரிகின்றது..
அசாதாரண நிலை
உக்ரைன் ரஷ்யாவின் வசம் சென்றால் மட்டும் இப்பிரச்சனை முடிவுக்கு வரும். இல்லையெனில் ரஷ்ய படைகளை உக்ரைனை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். ஆனால் இது இப்போதைக்கு சாத்தியமான விஷயமாகவும் இல்லை. மொத்தத்தில் இந்த பதற்றமான போக்கே இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
இதற்கிடையில் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 100 டாலர்களை கடந்துள்ள நிலையில், இது இன்னும் உச்சம் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் 2014க்கு பிறகு மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.
இந்தியாவுக்கு நஷ்டம்
இது குறித்த எஸ்பிஐ அறிக்கையின் படி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டால், மோடி அரசுக்கு 95,000 – 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் 2023ம் நிதியாண்டில் இழப்பு ஏற்படலாம் என கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், நவம்பர் 2021 முதலே அரசு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை.
பெட்ரோல், டீசல் ரூ.9 – 14 அதிகரித்திருக்கலாம்
தற்போதுள்ள வரி அடிப்படையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 95 – 110 டாலர்களாக வைத்துக் கொண்டால், தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலையானது 9 – 14 ரூபாய் அதிகரித்திருக்க வேண்டும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் தேர்தல் நடந்து வரும் நிலையில், கலால் வரியினை அரசுலிட்டருக்கு 7 ரூபாய் குறைத்தது. இதனால் விலையானது எரிபொருள் விலையானது ஏற்றம் காணாமல் உள்ளது.
அரசுக்கு பெரும் இழப்பு
வரி குறைப்பு நல்ல விஷயமாக இருந்தாலும், இதன் காரணமாக அரசுக்கு மாத மாதம் 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த நிதியாண்டிலும் இந்த வரி குறைப்பானது தொடர்கிறது என வைத்துக் கொள்வோம். அடுத்த நிதியாண்டில் நுகர்வானது 8 – 10% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு 95000 – 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என எதிரொபார்கப்படுகிறது.
பணவீக்க அச்சம்
இதற்கிடையில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 6.01% ஆக இருந்தது. இது ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. எனினும் தற்போது அதிகரித்து வரும் உக்ரைன் – ரஷ்யா பதற்றங்களுக்கு மத்தியில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது ஒரு புறம் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். மறுபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயரும் காரணமாக அமையலாம்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் கடந்த அமர்வில் 105.79 டாலர்கள் வரையில் அதிகரித்து காணப்பட்டது. இது தற்போது 0.69% குறைந்து 94.77 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது தற்போதைக்கு குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
WTI கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது 0.42% குறைந்து, 92.42 டாலர்களாக காணப்படுகின்றது. இது தற்போதைக்கு குறைந்திருந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாக டெக்னிக்கலாகவும் காணப்படுகின்றது. ஃபண்டமெண்டல் காரணிகளும் கச்சா எண்ணெய்க்கு சாதகமாக உள்ளன. ஆக இது மேற்கொண்டு விலையினை ஊக்குவிக்கலாம்.
இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்று கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு, 308 ரூபாய் குறைந்து, 6967 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பாதிப்பு தான்.
ஆக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கும் பட்சத்தில், அரசு கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படலாம். இது மேற்கோண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். மொத்ததில் விலையே சில ரூபாய்கள் அதிகரிக்கும் பட்சத்தில் குறைக்கப்பட்ட வரியினை அதிகரித்தால், விலை இருமடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. மொத்தத்தில் இது அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றாலும், விலை இருமடங்கு அதிகரிக்கும் பட்சத்தில் அது மக்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
Rising crude oil prices can create Rs.1 lakh crore revenue loss to indian govt in FY23
Rising crude oil prices can create Rs.1 lakh crore revenue loss to indian govt in FY23/ரஷ்யாவால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம்.. புட்டு புட்டு வைத்த எஸ்பிஐ அறிக்கை!