உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் அந்நாட்டுக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப அவர்களின் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை ரஷ்யா தங்கள் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வந்த ரஷ்யா நேற்று உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது.
இதற்கிடையில் உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்களை உடனே அங்கிருந்து வெளியேறும்படி அங்குள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டது. உக்ரைனில் இருந்து பிப்ரவரி 22, 24 மற்றும் 26-ல் 3 விமானங்களை இயக்கப் போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் முதல் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை புறப் பட்டு டெல்லி வந்தது. இதில் சுமார் 240 பேர் தாயகம் திரும்பினர்.
இதையடுத்து நேற்று காலையில் கீவ் நகரில் உள்ள இந்தியர்களை அழைத்துவர, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆனால் ரஷ்யப் படைகளின் தாக்குதல் காரணமாக போரிஸ்பில் விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் உக்ரேனிய வான்வெளியும் மூடப்பட்டது. இதனால் ஏர் இந்தியா விமானம் பாதியிலேயே டெல்லி திரும்ப நேரிட்டது.
இதையடுத்து உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய மாணவர்களுக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் உறுதியளித்துள்ளது. இந்திய பிரஜைகளை அமைதியாக இருக்குமாறும் இருக்கும் இடத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்தை அணுகினர்.
இவர்களில் பூஜா என்பவர் கூறும்போது, “எனது சகோதரர் தனது நண்பர்கள் சிலருடன் கார்கீவ் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். அவரது பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். கடைசியாக பத்து நிமிடங்களுக்கு முன்பு என் சகோதரனிடம் பேசினேன். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கூறினார்” என்றார்.
நேஹா என்பவர் கூறும்போது, “எனது சகோதரர் உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரிடம் பேசினோம். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ளவே இங்கு வந்தேன்” என்றார்.
டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் தொடர்புகொள்ள வசதியாக இது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புக்காக தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து 350 மாணவ, மாணவியர் உக்ரைன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அங்கு போர் மூண்டுள்ளதால் இவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என இவர்களின் பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறைக்கு இ-மெயில் மூலம் கோரி வருகின்றனர். இதுவரை சுமார் 400 பெற்றோர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.- பிடிஐ .