உக்ரைன் தலைநகர் கியவ்-க்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அந்த ஏவுகணைகளை உக்ரைன் ஏவுகணை தடுப்பு அமைப்பு எதிர்கொண்டு அழித்துவருவதால் தலைநகரில் தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்பதாக உக்ரைன் வெளியுறவு இணை அமைச்சர் யெவ்ஹென் யெனின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தலைநகர் கியவ் மீது ரஷ்ய படையினர் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற வலுவான தாக்குதல்களை இதற்கு முன்பு கடந்த 1941-ம் ஆண்டு ஹிட்லர் ஆட்சிக்காலத்திலேயே கியவ் எதிர்கொண்டதாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
1941-ம் ஆண்டு தாக்குதல்களையே உக்ரைன் அழித்திருப்பதாக கூறியுள்ள அவர், ரஷ்யாவின் தற்போதைய தாக்குதல்களையும் உக்ரைன் முறியடிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, டுவிட்டர் வாயிலாக புத்தினை தடுத்து நிறுத்துங்கள், ரஷ்யாவை தனிமைப்படுதுங்கள், உறவுகளை வலுப்படுத்தி அனைத்து இடங்களில் இருந்தும் ரஷ்யாவை வெளியேற்றுங்கள் என நேட்டோ படையினரை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெலாரஸ் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள் தலைநகர் கியவ்-வின் மத்திய பகுதியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபடி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.