ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, அழிவுக்கு ரஷ்யாவே காரணம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீது ஜி7 சார்பில் மேலும் பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.

நேட்டோ படைகளின் தலைவர் ராப் கூறும்போது, ‘‘நேட்டோ படையில் உக்ரைன் அங்கம் வகிக்கவில்லை. எனவே, அந்த நாட்டுக்கு நேரடியாக ராணுவ உதவியை வழங்க முடியாது. எனினும் எங்களால் முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதில் உக்ரைன் போர் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த இந்தியா, அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தது. எனினும் ரஷ்யா மீது இந்தியா எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

உக்ரைன் விவகாரத்தில் ஆரம்பம் முதலே இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.உக்ரைனில் சுமார் 24 ஆயிரம் இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். உக்ரைனில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள், அடுத்த 6 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். போதுமான உணவு, தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா நடுநிலை வகித்திருப்பதை வரவேற்பதாக டெல்லியில் செயல்படும் ரஷ்ய தூதரகத்தின் மூத்த அதிகாரி ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.