ரஷ்யா மீது பொருளாதாரத் தடையின் எதிரொலி – இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் கணிசமாக உயர்ந்தன. தங்கம் மற்றும் கச்சா எண்ணெயும் விலை குறைந்துள்ளன.
உக்ரைன் மீது இரண்டாவது நாளாக தாக்குதலை தொடர்வதால், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, இன்று ஹான்சாங், நிக்கி, கோஸ்பி உள்ளிட்ட ஆசியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் கணிசாமக உயர்ந்தன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 2 ஆயிரத்து 700 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், இன்று ஆயிரத்து 328 புள்ளிகள் உயர்ந்து 55 ஆயிரத்து 858 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டியும் 410 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16 ஆயிரத்து 658 புள்ளிகளில் நிறைவுபெற்றது. முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
image
உக்ரைன் போர் காரணமாக நேற்று கணிசமாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 136 ரூபாய் குறைந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 142 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 809 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆயிரத்து 136 ரூபாய் விலை இறங்கி 38 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 34 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 26 காசுகளில் நிறைவடைந்துள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது 3 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. நேற்று உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுத்ததால் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 105.79 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்தது.
image
தாக்குதலை தொடரும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை மீட்சியடைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 96 டாலரில் வர்த்தகமாகிறது. இருப்பினும் இந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 10 டாலர் அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும் என ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.