ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பேரில் ரஷ்ய ராணுவம் நேற்றுமுதல் உக்ரைனில் போர் செய்து வருகிறது. இதனால் உக்ரைனில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமாக இருக்கின்றன. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக விடுத்தது வந்தாலும், வெளிப்படையாக எந்த நாடும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காததால், உக்ரைன் தனது படைகளுடன் ரஷ்யாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதினுடன் மீண்டும் ஒருமுறை பேச விரும்புகிறேன். போரில் மக்கள் இறப்பதைத் தடுக்க, வாருங்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்வோம்” என தனியார் ஊடகத்திடம் பேசியிருந்தார்.
முன்னதாக, “ உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். உக்ரைனை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கவே ரஷ்யா விரும்புகிறது. உக்ரைன் அரசு, நடுநிலை குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுவது பொய்” என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று செய்தியாளர்களிடத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.