ரஷ்ய அதிபர் புதினின் சொத்துக்கள் முடக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி



உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் செய்துவரும் நிலையில், அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் திட்டமிட்டுருப்பதாக மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

அதற்கேற்ப ரஷ்யா உக்ரைன் மீது வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா ராணுவம், அதன் பின்னர் தரைவழியாகவும் தாக்குதலை நடத்தியது.

முதல் நாளில் மட்டும் சுமார் 60-க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ தளங்களை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2-வது நாளாக (வெள்ளிக்கிழமை) போர் தொடரந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது.

இதனிடையே ரஷ்ய அதிபர் புதினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் ரஷ்யாவுக்கு எதிரான இந்த போரில் உக்ரைன் தனித்து விட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் புதினுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் தொடர்புடைய சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது ஐரோப்பியாவில் உள்ள புதின் மற்றும் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரது சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது பல கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை செய்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நிதி, எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், ரஷ்யாவுக்கான ஏற்றுமதியிலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையால் ரஷ்யாவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு வருவாய் குறையலாம்.

ஐரோப்பாவின் முக்கிய எரிசக்தி விநியோகிப்பாளராக இருக்கும் ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எரிவாயு, நிலக்கரி ஏற்றுமதியைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.