வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை

கொல்கத்தா :

மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த கவர்னர் ஜக்தீப் தன்கார் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 7-ந் தேதி நள்ளிரவில் சட்டசபை கூட்டம் ஆரம்பிக்க உள்ளது.

சட்டசபை கூட்டம் தொடர்பாக கவர்னருக்கு மாநில அரசால் அனுப்பட்ட பரிந்துரை கடிதத்தில், சாதாரண தட்டச்சு பிழையாக பகல்பொழுதை குறிக்கும் ஆங்கில குறியீடான பி.எம். என்பதற்குப் பதிலாக, இரவு நேரத்தை குறிக்கும் ஏ.எம். என்ற குறியீடு, இடம் பெற்றுவிட்டது.

இருந்தாலும் பிழை நேர்ந்ததன்படி அசாதரணமான நிலையில் நள்ளிரவில் சட்டசபையை கூட்டலாம் என்று சபாநாயகர் பிமன் பானர்ஜியும் கேட்டுக்கொண்டதால், மம்தா பானர்ஜி தலைமையிலான சட்டசபையை நள்ளிரவில் கூட்ட கவர்னரும் அழைப்பு விடுத்துள்ளார்.

நள்ளிரவில் கூட்டத்தை கூட்டுவதானால், சட்டசபை உறுப்பினர்கள் நள்ளிரவில் கண்விழித்து கூட்டத்தில் ஆஜராக வேண்டும். கவர்னர் தங்கரும், கூட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்த வேண்டும்.

கவர்னர் இதுகுறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கூட்டத் தொடர் நேரம் கூறித்து தலைமை செயலாளருடன் விவாதிக்க முற்பட்டபோது அது முடியாமல் போனதாகவும், எனவே மாநில அரசு அறிக்கை அழைப்பின்படியே நள்ளிரவிலேயே கூட்டத்தை நடத்த முடிவு செய்து அறிவித்துவிட்டதாகவும் கூறி உள்ளார். அதன்படி வரும் மார்ச் 7-ந் தேதி நள்ளிரவில் சட்டசபை கூட்டம் கூட்டப்படுகிறது என்று அவர்அறிக்கை வெளியிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.