திண்டுக்கல்: தக்காளி விளைச்சல் அதிகரித்து தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், தக்காளியை விற்பனை செய்ய தெருத் தெருவாக வாகனங்களில் வந்து கூவி குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழநி, அய்யலூர், வடமதுரை, தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமடைந்ததால் வரத்து குறைந்து ஒரு கிலோ விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. இதன்பின் தக்காளி செடிக்கு ஏற்ற இதமான காலநிலை நிலவியதால் செடிகளில் தக்காளி காய்த்துக் குலுங்க துவங்கியது. இதனால் மார்க்கெட்டிற்கு கடந்த மாதம் இறுதி முதல் அதிகரிக்கத் துவங்கியது. இதையடுத்து தக்காளி விலை படிப்படியாக குறையத் துவங்கியது.
தற்போது வரத்து மேலும் அதிகரித்து தேவை குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி வெளி மார்க்கெட்டில் ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பனையாகிறது. தக்காளி வரத்து அதிகரித்தால் அனைத்தையும் ஒரே இடத்தில் விற்பனை செய்ய முடியாத நிலையில் சிறிய வானங்களில் மொத்தமாக ஏற்றிக்கொண்டு தெருத் தெருவாகச்சென்று ஒலிபெருக்கி மூலம் கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.
தக்காளி விலை குறைவால் விவசாயிகள் செடிகளில் பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டுவரும் கூலி கட்டுபடியாகததால் செடியிலேயே சிலர் விட்டுவிடவும் செய்கின்றனர். இதையறிந்து மிககுறைந்த விலைக்கு தோட்டத்திற்கே சென்று பலர் தக்காளிகளை வாங்கி விற்பனை செய்துவருகின்றனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கமிஷன் கடை உரிமையாளர் ஆறுமுகம் கூறியது: ”கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையானதால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர். தற்போது அவை அறுவடைக்கு வந்ததால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி (14 கிலோ) ரூ.50-க்கு விற்பனையாகிறது (ஒரு கிலோ 3.50). வெளி மார்க்கெட்டில் ரூ.5 முதல் 10 வரை விற்பனை செய்கின்றனர்.
தேவை குறைவாக இருப்பதால் மார்க்கெட்டிற்கு வருகின்ற தக்காளியை மொத்தமாக வாங்கிச்செல்லும் வியாபாரிகள் குறைந்த அளவே வாங்கிச் செல்கின்றனர். இதனால் சிறுவியாபாரிகள் வாங்கிச் சென்று நேரடியாக விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர வாய்ப்புள்ளது” என்றார்.